குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செக் வைக்க இருப்பதாக தகவல்கள் கசிந்து வருகின்றன!

கடந்த 23ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடப்பாடி தலைமையில் அ.தி.மு.க. செயல்படும் விதமாக ஒற்றைத் தலைமை தீர்மானம் நிறைவேற்றப்பட இருந்தது. இந்த விவகாரம் ஓ.பி.எஸ்.ஸிற்கு தெரியவர, பொதுக்குழு நடத்தவேண்டாம். கொஞ்ச நாட்களுக்கு தள்ளிப் போடலாம் என்றார். ஆனால், எடப்பாடி தரப்பு ஓ.பி.எஸ்.ஸின் பேச்சை புறக்கனித்தனர்.

இந்த நிலையில்தான் பொதுக்குழு விவகாரமாக ஓ.பி.எஸ். தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியது! இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ் கிருஷ்ணா, ‘பொதுக்குழு நடத்த யாரும் தடை கோரவில்லை. தீர்மானங்கள் நிறைவேற்றுவதில்தான் பிரச்னை. ஒரு அரசியல் கட்சி மற்றும் சங்க விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடுவதில்லை. எனவே, புதிய தீர்மானங்களையும் நிறைவேற்றிக் கொள்ளலாம் என தீர்ப்பளித்தார்.

அதிமுக பொதுக்குழுவை நடத்த தடை விதிக்க முடியாது என்ற சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்திருக்கிறது. அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த இந்த மனு மீது நீதிபதிகள் துரைசாமி மற்றும் சந்திரமோகன் அமர்வு நள்ளிரவில் மனுவை விசாரித்தது.

விடிய விடிய நடைபெற்ற விசாரணையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் காரசார வாதங்களை முன்வைத்தனர். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், பொதுக்குழுவை நடத்தலாம் என்றும் 23 தீர்மானங்களை தவிர்த்து வேறு புதிய தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது எனவும் உத்தரவிட்டு உள்ளனர். இதன் காரணமாக ஒற்றைத் தலைமை தீர்மானம் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படாது என்பதால் ஓபிஎஸ் தரப்பு ஆறுதல் அடைந்து இருக்கிறது.

ஓ.பி.எஸ்.ஸிற்கு சாதமாக தீர்ப்பு வந்தது அவரது ஆதரவாளர்களை குஷிப்படுத்தியது. மேலும் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றியது எடப்பாடி தரப்பு. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு எடப்பாடியாருக்குதான் ஆளுமை இருக்கிறது என்பது பொதுக்குழு கூட்டத்தை கவனித்த அனைவரும் புரிந்திருப்பார்கள்.

முதலில் எடப்பாடி தரப்பிற்கு ஆதரவாகவும், பின்னர் ஓ.பி.எஸ். தரப்பிற்கு ஆதரவாகம் நிலைமை மாறி மாறி வருவதால், மேலிடத்தின் மீது எடப்பாடி தரப்பிற்கு சந்தேகம் வந்திருக்கிறது. இதனை ஊர்ஜிதம் செய்யும் வகையில், பி.ஜே.பி.க்கு மிகவும் ஆதரவான பத்திரிகையின் ஆசிரியர் ஒருவர் நேற்று டி.வி. விவாதத்தில் பேசும்போது, எடப்பாடிக்கு எதிராகவும், ஓ.பி.எஸ்.ஸிற்கு ஆதரவாகவும் பேசினார்.

இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி பி.ஜே.பி.க்கு செக் வைக்கும் விதமாக சில காய்களை நகர்த்தி வருவதாக தகவல்கள் வெளியானது. இது பற்றி மேலிட வட்டாரத்தில் சிலரிடம் பேசினோம்.

‘‘சார், பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்விடுவது என்று சொல்வார்கள். அதைத்தான் அ.தி.மு.க. விவகாரத்தில் ‘மேலிடம்’ செய்து வருகிறது. அதாவது, எடப்பாடிக்கு ஆதரவாகவும் செயல்படுவதுபோல் செயல்பட்டுவிட்டு, அவருக்கு எதிராக ஓ.பி.எஸ்.ஸை செயல்படவைத்து, அவருக்கு சாதகமாக எல்லாவற்றையும் செய்துவருகிறார்கள்.

அதாவது, குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக எடப்பாடியை சந்திக்க வந்த சி.டி.ரவி, அண்ணாமலை ஆகியோர், அடுத்து ஓ.பி.எஸ்.ஸையும் சந்தித்திருக்கிறார்கள். அதன் பிறகுதான் ஓ.பி.எஸ்.ஸின் டெல்லி பயணம் உறுதியாயிருக்கிறது. உண்மையிலேயே குடியரசுத் தலைவர் தேர்தலில் பி.ஜே.பி. எடப்பாடி தரப்பிடம்தான் ஆதரவு கேட்டிருக்க வேண்டும். இரட்டையர்களுக்கிடையேயான மோதல் வெடித்திருக்கும் நிலையில், இருதரப்பிடமும் கேட்டிருக்கக்கூடாது. எடப்பாடி தரப்பில்தான் எம்.எல்.ஏ.க்கள் அதிகம் இருக்கிறார்கள்.

இப்படி ‘மேலிடம்’ டபுள் கேம் ஆடுவதை எடப்பாடி ரசிக்கவில்லை. இது பற்றி கடந்த முறை அ.தி.மு.க. தேர்தல் ஆலோசகராக இருந்த சுனிலிடம் எடப்பாடி தரப்பு பேசியிருக்கிறது. அவர், சில ஆலோசனைகளை சொன்னபிறகு, ராகுல் காந்தியிடம் எடப்பாடி தரப்பு பேசியதாக தகவல்கள் கசிகிறது. இனியும் மேலிடம் டபுள் கேம் விளையாடினால், எடப்பாடியார் தரப்பின் ‘விளையாட்டும்’ வேறுமாதிரி இருக்கும்’’ என்றனர்.

ஆக, மொத்தத்தில் குடியரசுத் தலைவர் தேர்தலில் பி.ஜே.பி.யை எடப்பாடி தரப்பு அசைத்துப் பார்த்திருப்பதுதான், தமிழகத்தைத் தாண்டி டெல்லியிலும் புயலடிக்கிறது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal