ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓ.பி.எஸ். சமாதானப்படுத்த செங்கோட்டையனையும், தம்பிதுரையையும் இந்த முறை தூது அனுப்பியிருக்கிறார் எடப்பாடியார். இந்த முறை ‘மணி’களை தவிர்த்துவிட்டார்.
திமுக.,வில் ஒற்றை தலைமை பிரச்னை பெரிதாகியுள்ள நிலையில் பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில் முக்கிய நிர்வாகிகள் பெரும்பாலானோர் பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனிடையே, ஒற்றை தலைமை தீர்மானத்தை பொதுக்குழுவில் நிறைவேற்றுவது என பழனிசாமி தரப்பு முடிவு செய்துள்ளதாகவும், தற்காலிகமாக பொதுக்குழுவை ஒத்திவைக்க பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நீதிமன்றத்தை நாடவும் பன்னீர் தரப்பு தயாராகி வருகிறதாம்.
வரும் 23ம் தேதி அ.தி.மு.க., பொதுக்குழு கூட உள்ள நிலையில், ஒற்றை தலைமை பிரச்னை பெரிதாகி உள்ளது. பழனிசாமி தரப்பினர், ஒற்றை தலைமையை வலியுறுத்துகின்றனர். ஆனால், ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இரட்டை தலைமை என்பதில் உறுதியாக உள்ளனர். இது தொடர்பாக இரு தரப்பிலும் மாறி மாறி ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பழனிசாமி, இன்றும் தனது வீட்டில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் செங்கோட்டையன், கே.பி.முனுசாமி, சி.விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் என்.ஆர்.சிவபதி, அ.தி.மு.க., இளைஞரணி பாசறை செயலாளர், மாணவர் செயலாளர் விஜயகுமார், அதிமுக திருச்சி மாவட்ட இளைஞரணி செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதனிடையே தேனி நகர செயலாளர் கிருஷ்ணகுமார், நகர பொருளாளர் சோலை ராஜா, முன்னாள் மாவட்ட துணை செயலாளர் ராமர், கம்பம் ஒன்றிய செயாளர் இளைய நம்பி, முன்னாள் எம்.எல்.ஏ.,ஜக்கையன், பெரியகுளம் ஒன்றிய செயலர் அன்னபிரகாஷ், சின்னமனூர் ஒன்றிய அவை தலைவர் கண்ணன், ஆண்டிபட்டி பேரூர் கழக செயலாளர் பொன்முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பழனிசாமியை நேரில் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
ஒற்றை தலைமை தீர்மானம் தொடர்பாக நிறைவேற்ற பழனிசாமி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், பொதுக்குழுவை தற்காலிகமாக ஒத்திவைக்க பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தம்பிதுரையிடம் தனது முடிவை தெரிவித்துள்ள அவர், கடந்த 3 ஆண்டுகளாக சமரசம் செய்து கொண்டது போதும். இனிமேல் சமரசத்திற்கு இடமில்லை எனவும் அவர் கூறியுள்ளதாகவும், தனது ஆதரவு மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு நிர்வாகிகள் என 200 முதல் 250 பேரிடம் பன்னீர்செல்வம் கையெழுத்து வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, பழனிசாமியை சந்தித்த செங்கோட்டையன் மற்றும் தம்பிதுரை ஆகியோர் தொடர்ந்து பன்னீர்செல்வத்தையும் சந்தித்து பேசினார். இருவரும் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது பன்னீர்செல்வம் வீட்டிற்கு செல்லூர் ராஜூவும் வந்துள்ளார்.
