ஐதராபாத்தில் நட்சத்திர ஹோட்டலில் நடந்த போதை விருந்தில் நடிகர் சிரஞ்சீவியின் சகோதரரான நடிகர் நாகபாபுவின் மகள் நிஹாரிகா உட்பட 148 பேர் கைது செய்யப்பட்டனர்.

திரை பிரபலங்கள், அதிகாரிகளின் வாரிசுகள் என பலரிடமும் இப்போது போதை பொருட்களின் புழக்கங்கள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகனும் இது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்தார்.

இந்த நிலையில், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸில் உள்ள ரேடிசன் புளூ ஐந்து நட்சத்திர ஹோட்டல் பப்பில் நேற்று (ஏப்ரல் 3) அதிகாலையில் நடந்த பார்ட்டியில் கொகைன், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பயன்படுத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அந்த ஹோட்டலில் திடீரென சோதனை மேற்கொண்ட போலீசாரின் வலையில் நடிகர்களின் வாரிசுகள், அரசியல்வாதிகளின் வாரிசுகள், முக்கிய வி.ஐ.பி.,க்கள் என பலரும் சிக்கினர். கைது செய்யப்பட்டவர்களில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் சகோதரரும், நடிகர் நாகபாபுவின் மகளுமான நிஹாரிகா கொனிடேலா, பின்னணி பாடகர் ராகுல் சிப்லிகஞ்ச், முன்னாள் டிஜிபியின் மகள், தெலுங்கு தேசம் எம்பி.,யின் மகன் உட்பட 148 பேர் சிக்கியுள்ளனர். கைது செய்யப்பட்ட பாடகர் ராகுல் சிப்லிகஞ்ச், போதைப் பொருளுக்கு எதிரான ஐதராபாத் போலீசின் பிரசார பாடலையும் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக ஐதராபாத் போலீசார் கூறுகையில், ‘‘ஐதராபாத் முழுவதும் போதை பொருள் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ரேடிசன் புளூ நட்சத்திர ஹோட்டலில் நடத்திய சோதனையில் 35 பெண்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்’’ என்றனர்.

அதேநேரத்தில், நடிகர் நாகபாபு வெளியிட்ட வீடியோவில், ‘‘எனது மகள் நிஹாரிகா அந்த ஹோட்டலில் இருந்தது உண்மை. ஆனால், அவர் எந்த தவறும் செய்யவில்லை. ஊடகங்கள், சமூக ஊடகங்களில் வதந்திகளை பரப்ப வேண்டாம்’’ எனக் கூறியுள்ளார்.

நிஹாரிகா தமிழில் ‘‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’’ என்னும் படத்திலும் நடித்துள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal