ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் முதன்முறையாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆஜராகியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் 2 ஆண்டுகளுக்கு பின்பு கடந்த சில நாட்களுக்கு முன் விசாரணையை மீண்டும் தொடங்கியது.

முன்னதாக ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளிட்ட 154 பேரிடம் ஆணையம் ஏற்கனவே விசாரணை நடத்தி உள்ளது. இந்த நிலையில், கடந்த ஆண்டில் 8 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத ஓ.பன்னீர்செல்வம் விசாரணை ஆணையத்தில் தற்போது ஆஜராகியுள்ளார். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குரல் எழுப்பியவர்களில் முக்கியமானவர் ஓபிஎஸ். சென்னை எழிலகத்தில் உள்ள ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தில் ஓபிஎஸ் ஆஜராகியுள்ளதாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதிமுக தொண்டர்கள் ஏராளமாக திரண்டுள்ள நிலையில் காவல்துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். தற்போது இளவரசியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதால் ஓ.பன்னீர்செல்வத்திடம் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

அப்பல்லோ மருத்துவர்களிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை நடத்தி வரும் நிலையில் ஓபிஎஸ் ஆஜராகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal