நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை, 49 வது வார்டுக்குட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் கள்ள ஓட்டு போட முயன்றதாக தி.மு.க. பிரமுகரை தாக்கிய வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் மூன்று வழக்குகளிலும் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.திருச்சியில் 2 வாரங்கள் தங்கி இருந்து கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அவர் 12ம் தேதி காலை புழல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். கோர்ட்டு உத்தரவுப்படி கடந்த திங்கள்கிழமை முதல் கன்டோன்மென்ட் உதவி ஆய்வாளர் அகிலா முன்னிலையில் கையெழுத்திட்டு வருகிறார்.

காவல்நிலையத்தில் கையெழுத்திட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘‘திமுக தொடர்ந்து அதிமுக அமைச்சர்கள் மீதும் கழக முன்னோடிகள் மீதும் வழக்குகள் தொடர்ந்து மிரட்டி பார்க்கிறார்கள். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றாமல் தொடர்ந்து அதிமுக அமைச்சர்கள் மீது வழக்குகளை போட்டு பணம் நகை ஏதும் சல்லி காசு கூட கைப்பற்றாமல் அதை கைப்பற்றியதாக குறிப்பிடுவது பொய்’’ என குற்றம் சாட்டினார்.

திமுக ஆர். எஸ். பாரதி ஜாமினில் வெளி வந்த ஜெயக்குமார் தொடர்ந்து பேட்டிகளை கொடுத்து வருவதாக கூறியது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், ‘‘நீதிமன்ற உத்தரவுபடி திருச்சியில் தங்கி இருந்து காவல் நிலையத்தில் கையெழுத்திடுகிறேன். செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுக்கக் கூடாது என்று நீதிமன்றம் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை’’ என்றும் ஜெயக்குமார் கூறினார்.

அதேநேரம் அதிமுகவில் திமுகவை நேரடியாகவும் வெளிப்படையாகவும் விமர்சிக்கும் அதிமுகவினரின் முக்கிய பிரமுகர்களின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் ஒருவர் என்பதால் அவருக்கு அதிமுகவில் முக்கிய பொறுப்பு கொடுக்க அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி முடிவுகள் மேற்கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அதேநேரம், ஒவ்வொரு முறையும் காவல் நிலையத்தில் கையெழுத்திட வரும்பொழுது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உடன் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் படைசூழ விமரிசையாகவே ஊர்வலமாக வந்து காவல் நிலைத்தில் கையெழுத்திடுவது லோக்கல் திமுக பார்ட்டிகளை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

ஒவ்வொரு நாளும் கட்சி பிரமுகர்கள் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு தடபுடல் கறி விருந்து அளித்து திருப்தி படுத்தி வருகின்றனர். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தமிழக அரசால் குற்றவாளியாக கருதப்படும் சூழலில் அதிமுகவினர் அவரை ஏதோ சாதனை பண்ணியது போல் வெகு விமர்சையாக மாலை அணிவித்து காவல் நிலையத்தில் வரவேற்பதும், பட்டாசுகள் வெடித்து பட்டைய கிளப்புவதும் அரசியல் ஆர்வலர்களை திரும்பிப் பார்க்கத் தான் வைத்திருக்கிறது.

இந்த நிலையில் மாஜி மந்திரி ஜெயக்குமாருக்கு ‘அமோக’ வரவேற்பு கொடுத்தற்காக, கொரானா விதிமுறைகளை மீறி கூட்டம் கூடியது, பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு செய்வது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, பரஞ்சோதி, முன்னாள் எம்பி குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal