தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்ற போதிலும், ‘அ.தி.மு.க.விற்குள் சசிகலா நுழைவாரா?’ என்பதுதான் ஹாட் டாஃபிக்காக இருக்கிறது. அ.தி.மு.க.வின் கொங்கு கோட்டையை தகர்த்தெறிந்து விட்டது உதயநிதியின் பிரச்சாரம். ஆனாலும், சசிகலா விவகாரம்தான் கடந்த சில தினங்களாக பேசு பொருளாக இருக்கிறது.

இந்த நிலையில்தான் மகளிர் தினத்தை முன்னிட்டு, அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடந்த மகளிர் தின நிகழ்ச்சியில், ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இருவரும் 20 நிமிடங்கள் யாரும் இல்லாமல், தனியாக ஆலோசனை நடத்தியிருக்கின்றனர். அப்போது, எடப்பாடியாரிடம் ஓ-.பி.எஸ். சொன்ன தகவல்கள், அவரை அப்படியே அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. அதாவது, ‘ஒருவாரத்திற்கு முன்பே ‘மேலிடம்’ சசிகலாவை அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக்க க்ரீன் சிக்னல் கொடுத்துவிட்டதாம். இதுதான் எடப்பாடியாருக்கு அந்த அதிர்ச்சி தகவல்.

‘மேலிடம்’ டக்கென மனம் மாற என்ன காரணம்…? எடப்பாடியாரும் அ.தி.மு.க.வை சிறப்பாகத்தானே வழி நடத்திச் சென்றார்… அப்புறம் எதற்காக சசிகலாவின் என்ட்ரி… அதுவும் பொதுச்செயலாளர் பதவி… என்ற கேள்விகளோடு, டெல்லி சோர்ஸுகளிடம் பேசினோம்..!

‘‘மறைந்த முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதை விட, இருவரும் நல்ல நண்பர்கள். ஒரு மாநிலத்திற்கு பிரதமர் வந்தால், விமான நிலையத்திற்கே சென்று முதல்வர்கள் வரவேற்பார்கள். ஆனால், ஜெயலலிதா இருக்கும் போது, அவரது இல்லம் தேடி சென்றார் பிரதமர் மோடி.

பிரதமர் தன் மீது வைத்திருக்கும் மரியாதைக்கு எந்தவகையிலும் குறைவில்லாமல், பிரதமர் மோடிக்கு என்ன பிடித்திருக்கிறதோ, அதை ஸ்பெஷலாக சமைத்தும், ஆர்டர் பண்ணி வாங்கியும், அவருக்கு சிறப்பான கவனிப்பு போயஸ் கார்டனில் அளிக்கப்படும். அதாவது அன்றுதான் கார்டனில் தீபாவளி என்று கூறலாம், அப்படிப்பட்ட (அரசியலைத் தாண்டி) உறவுதான் இருவருக்குமானது!

இந்த நிலையில்தான் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் பல மாதங்கள் சிகிச்சை பெற்று மறைந்தார். (சிகிச்சை தொடர்பான எந்த தகவலும் வெளியிடவில்லை என்று…) அப்போது சசிகலா குடும்பத்தினர் மீது அவதூறுகள் அள்ளிவீசப்பட்டனர். அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாகவும் பேசிக்கொண்டனர். இதற்கு காரணம் சசிகலா குடும்பத்தினர்தான் என்றும் சிலர் வதந்தியை கிளப்பினார்கள். ( ‘அது உண்மை இல்லை’ என்று ஆர்.கே.நகர் தேர்தல் பிரச்சாரத்தின் போது டி.டி.வி. ஜெ. ஜூஸ் குடித்துக்கொண்டே சிகிச்சை பெறும் வீடியோ ஒன்றை வெளியிட்டது தனிக்கதை!)

இந்த நிலையில்தான், கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பல்லோ மருத்துவர், ஜெயலலிதா மரணம் பற்றி விசாரணை நடத்தும் விசாரணை ஆணையத்தில், ‘ஜெயலலிதாவை ஓய்வெடுக்கச் சொல்லியும்… அவர் ஓய்வெடுக்கவில்லை… 16 மணி நேரம் பணியில் ஈடுபட்டார்… இரண்டாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்ற போதுகூட, அவரால் தனியாக நடந்து வர முடியாத சூழல் ஏற்பட்டது’ என்று விளக்கம் அளித்தார். அதாவது ஜெ. மறைவிற்கும், சசிகலாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இவர் உடல் நலக்குறைவால்தான் உயிரிழந்தார் என்று இதன் மூலம் வெட்ட வெளிச்சமானது. இதன் பிறகுதான், சசிகலா மீதான ‘மேலிடத்தின்’ பார்வை வேறுமாதிரியாக விழ ஆரம்பித்தது.

தமிழகத்தில் தி.மு.க. வலுவாக காலூன்றி வருகிறது. சமீபத்தில் கூட, தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை வைத்து நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டிருக்கிறார். அப்போது பேசும் போது, ‘ஒன்றிய அரசு’ என்பதை அழுத்தமாக சொல்லி வருகிறார். அ.தி.மு.க.வினர் ஜெ. மறைவிற்குப் பிறகு கூட நம்மிடம் இணக்கமாகத்தான் இருக்கிறார்கள். இந்த சூழலில் அ.தி.மு.க. பிளவுபட்டுக்கொண்டிருந்தால், எதிர்காலத்தில் பி.ஜே-.பி. & அ.தி.மு.க. இரண்டுமே அதிகம் பாதிப்படைய வாய்ப்புண்டு என மாற்றி யோசித்து சசிகலாவிற்கு ‘கிரீன்’ சிக்னல் கொடுத்திருக்கிறார்களாம்.

இந்த விஷயத்தை முன்கூட்டியே ஸ்மெல் செய்த ஓ.பி.எஸ். தரப்பு, தேனியில் சசிகலாவிற்கு ஆதரவாக தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறார் ‘மேலிடம்’ சசிகலாவை பொதுச்செயலாளராக்க சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பி.ஜே-.பி. தரப்பு பத்து இடங்களை கேட்டுப்பெறுவது உள்பட முன்கூட்டியே பல்வேறு வியூகங்கள் வகுத்திருப்பதை எடப்பாடியாரிடம் சொல்லியிருக்கிறார். இந்த விவகாரத்தை எடப்பாடியாரிடம் தனி அறையில் ஓ.பி.எஸ். சொல்லியிருக்கிறார். இந்த விவகாரம் விரைவில் வெளிச்சத்திற்கு வரும். ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இருவருமே சசிகலாவை பொதுச்செயலாளர் நாற்காலியில் அமர வைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை’’ என்றனர்.

அ.தி.மு.க.வில் அதிரடி மாற்றம் நிகழும் என்பதால்தான், சசிகலா இணைப்பு பற்றி முன்னாள் அமைச்சர் வளர்மதியிடம் கேட்டபோது, ‘சசிகலா உட்பட அனைவர் தொடர்பாகவும் கட்சித் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம்’ என்று கூறிச் சென்றாரோ..?

சசிகலா விரைவில் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் ஆகிறாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal