முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வருகிற 5-ந்தேதி மாலை 5 மணிக்கு தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் நிதிநிலை மற்றும் வேளாண்மை அறிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்குதல் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது பற்றி தலைமைச் செயலக வட்டாரங்களில் பேசினோம்.

‘‘நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்த நிலையில் இதில் வெற்றிபெற்றவர்கள் இன்று காலை பதிவு ஏற்றார்கள். நாளை மறுநாள் மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடக்க உள்ள நிலையில் இன்று இவர்கள் பதவி ஏற்க உள்ளனர்.

இந்த தேர்தலில் திமுக அமோக வெற்றியை பெற்றது. 21 மாநகராட்சிகளையும் திமுக வென்றுள்ளது. அதோடு 21 மாநகராட்சிகளுக்குமான மேயர்களை திமுக ஏற்கனவே தேர்வு செய்துவிட்டதாக கூறப்படுகிறது. மறைமுக தேர்தலில் போட்டியிடுவதற்கான லெட்டர்கள் இவர்களிடம் வழங்கப்பட்டுவிட்டது. விரைவில் மேயர்கள் யார் யார் என்ற தகவல்கள் வெளியாக வாய்ப்புகள் உள்ளன.தமிழ்நாட்டில் சட்டசபை மேலவை ஒன்றை உருவாக்க வேண்டும் என்று திமுக தரப்பு குரல் கொடுத்து வருகிறது. முன்பே இருந்த சட்ட மேலவை கலைக்கப்பட்டுவிட்ட நிலையில் இந்த முறை மீண்டும் சட்ட மேலவை கொண்டு வரப்படும் என்று திமுக வாக்குறுதி கொடுத்து இருந்தது. இதனால் இந்த மேலவை பற்றி அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்கிறார்கள்.

அதேபோல் குடும்ப தலைவிக்கு 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டத்தையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்த உள்ளதாம். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் இந்த விவகாரம் எதிரொலித்தது. திமுக இந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வென்று இருந்தாலும் கூட தேர்தல் நேரத்தில் ஆளும் தரப்பிற்கு எதிரான அலையை இந்த விவகாரம் மட்டும் ஏற்படுத்தியது. இதனால் பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே இதை பற்றி அறிவிக்கும் வகையில் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளது.

அதேபோல் அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட் தொடர்பான ஆலோசனை செய்யப்பட உள்ளது. ஏற்கனவே நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறார். பட்ஜெட் பணிகளை அவர் செய்து வருகிறார். துறை ரீதியாக அமைச்சர்கள் முக்கிய ஆலோசனைகளை வழங்கும் வகையில் இந்த அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. தங்கள் துறைகளுக்கு தேவையான கோரிக்கைகளை அமைச்சர்கள் இதில் நிதி அமைச்சரிடம் அறிவிப்பார்கள். இதற்கு பின் சில முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது.

இந்த 3 அறிவிப்புகள் போக கட்சி மற்றும் ஆட்சி நிர்வாக ரீதியாக ஒரு அறிவிப்பும் வரும் என்கிறார்கள். அதுதான் எல்லோரும் எதிர்பார்த்த அமைச்சரவை மாற்றம். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பின் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்பது உறுதியாகி உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்களிடம் அமைச்சரவை மாற்றம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் என்கிறார்கள். அமைச்சர்களை துறைகள் ரீதியான சில மாற்றங்களுக்கு தயாராக இருக்கும் படி இதில் அறிவுத்தலாம்.

அதே போல், நடந்து முடிந்த நகர்ப்புற தேர்தலில் மக்கள் தி.மு.க.விற்கு அமோகமாக வாக்களித்துள்ளனர். அவர்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில், உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal