இந்தியாவிற்கு எதிராக இலங்கை செயல்பட்ட போது, குறிப்பாக தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்கிய போதும், இலங்கைக்கு ஆதரவாக சீனா நின்றது. பாகிஸ்தான் மறைமுகமாக ஆதரவு கொடுத்தது. இன்றைக்கு அதே போல்தான் ரஷ்யாவிற்கு சீனா நேரடி ஆதரவும், பாகிஸ்தான் மறைமுக ஆதரவும் கொடுத்து வருவதுதான் மேலும் பதற்றத்தை ஏற்படுத்துகிறது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் மேற்கு உலக நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக ஒரு அணியில் திரண்டு உள்ளது. இந்த நிலையில் இன்னொரு பக்கம் ரஷ்யாவிற்கு ஆதரவாக சீனா குரல் கொடுத்து வருகிறது. சர்வதேச அளவில் இது ஒரு வித பீதியை ஏற்படுத்தி உள்ளது.

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் உச்சத்தை தொட்டுள்ளது. உக்ரைன் நாட்டிற்குள் போர் தொடுப்பதாக இன்று ரஷ்ய அதிபர் புடின் அறிவித்தார். உக்ரைன் எல்லையில் கடந்த ஒன்றரை மாதமாக ரஷ்ய படைகள் குவிக்கப்பட்டு போர் பயிற்சிகள் செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று காலை புடின் அதிகாரப்பூர்வமாக போரை அறிவித்தார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம். இத்தனை நாட்கள் உக்ரைன் உள்ளே படைகளை அனுப்ப மாட்டோம் என்று கூறிய அதே புடின்தான். நான் கொடுக்க போகும் பதிலடியை பாருங்கள், தாங்க மாட்டீர்கள் என்று சவால் விட்டு உக்ரைனுக்கு உள்ளே படைகளை அனுப்பி உள்ளார்.

இந்த போரில் அதிக ஆபத்து அளிக்க கூடிய விஷயம் என்றால் அது ரஷ்யா – சீனா நட்புதான். உக்ரைனுக்கு ஐரோப்பா, நேட்டோ நாடுகள், அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது. ரஷ்யாவிற்கு சீனா நேரடியாகவும், பாகிஸ்தான் மறைமுகமாகவும், சீனாவின் நட்பு நாடுகளும் ஆதரவு அளித்து வருகிறது. அதிலும் இந்த போர் தொடங்கிய பின் ரஷ்யாவை சீனா நேரடியாக ஆதரித்து வருகிறது. குளிர்கால ஒலிம்பிக் தொடருக்கான சந்திப்பில் புடின், – ஜி ஜிங்பிங் சந்தித்துக்கொண்டனர்.

இவர்கள் இந்த சந்திப்பிற்கு பின் ஒன்றாக அறிக்கை வெளியிட்டனர். அதில் அமெரிக்காவை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தனர். ஐரோப்பா, தெற்கு பசிபிக், ஆசியாவில் அமெரிக்கா தவறான அரசியலை செய்ய முயல்கிறது. ரஷ்யா, சீனா இரண்டு நாடுகளும் தற்போது வரையறை இல்லாத உறவை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. நேட்டோ படைகளை தேவையின்றி அமெரிக்கா விரிவாக்கி வருகிறது. அதை ஏற்றுக்கொள்ள முடியாது. பனிப்போரில் இருந்தது போன்ற நிலையை நேட்டோ ஏற்படுத்தி வருகிறது என்று குறிப்பிட்டனர்.

அதேபோல், கடந்த மாதம் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவிற்கு ஆதரவாக சீனா மட்டுமே வாக்களித்தது. 15 உறுப்பு நாடுகள் கொண்ட இந்த குழுவில் ரஷ்யா உக்ரைனில் படைகளை குவிப்பதற்கு எதிராக அமெரிக்கா மீட்டிங்கை கூட்டி இருந்தது. இதில் சீனா மட்டுமே ரஷ்யாவிற்கு ஆதரவாக வாக்களித்தது. அதன்படி சீனாவிற்கு உக்ரைன் போரை விட ரஷ்யாவுடனான நட்பும், அமெரிக்க எதிர்ப்பும்தான் முக்கியம் என்பது தெரிய வந்துள்ளது.

இதைத்தான் அமெரிக்காவும் குற்றஞ்சாட்டியது. நேட்டோ செயலாளர் ஜென்ஸ் அளித்த பேட்டியில், நாம் இப்போது பார்த்துக்கொண்டு இருப்பது மிகவும் கடினமான சூழ்நிலை. உலகின் இரண்டு பெரிய ஆதிக்கம் மிக்க சேர்ந்துள்ளன. ரஷ்ய,- சீனா கரம் கொடுத்து ஒன்றாக ஆபரேஷன் செய்து வருகின்றன. இது சர்வதேச அமைதிக் குந்தகம் விளைவிக்கும் ஆபத்து உள்ளது. இப்போது உக்ரைன் போரில் ரஷ்யாவை சீனா ஆதரிக்க இன்னொரு காரணமும் உள்ளது.

ரஷ்யாவின் இந்த வியூகத்தை பயன்படுத்தி, இதேபோல் தைவானை சீனா ஆக்கிரமிக்க முடியும். அப்போது சீனாவிற்கு ஆதரவாக ரஷ்யா களமிறங்கும். இப்பொது ரஷ்யாவை மேற்கு உலக நாடுகள் தடுக்கவில்லை என்றால் அப்போது சீனாவையும் மேற்கு உலக நாடுகள் தடுக்காது என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவிற்கு ஒரே கல்லில் பல மாங்காய் என்பது போல இந்த சம்பவம் அமைந்துள்ளது. அதோடு கம்யூனிச நாடுகளின் எண்ணிக்கை சர்வதேச அளவில் உயர இந்த போர் தொடுப்புகள் சீனா – ரஷ்யாவிற்கு உதவியாக இருக்கும்.

இந்த நிலையில்தான் உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு எதிரான செய்திகளை வெளியிட கூடாது என்று சீனா அரசு தனது நாட்டு செய்தியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்க கூடாது. அது சர்வதேச விதிமீறல். ரஷ்யாவின் நடவடிக்கையில் எந்த தவறும் இல்லை. ரஷ்யாவை சீனா முழுமையாக ஆதரிக்கிறது என்றும் சீனா வெளிப்படையாக அறிவித்துள்ளது. இதனால் சர்வதேச அளவில் ஒரு வகையான பதற்றம் ஏற்பட்டுள்ளது.

போர் சூழல் ஏற்பட்டால் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு எதிராக சீனா – ரஷ்யா ஒன்று சேருமா என்பதே உலக நாடுகளின் அச்சமாக இருந்தது. அதை சீனா தற்போது நிஜமாக்கி உள்ளது. மேற்கு உலக நாடுகள் பயந்தது போலவே ரஷ்யா – சீனா ஒன்றாக சேர்ந்துள்ளது.

உலக நாடுகளுக்கு எதிராகவே எட்டப்பன் வேலையை பார்க்கத் தொடங்கியிருக்கிறது சீனா. இது எங்கு போய் முடியுமோ? என்ற அச்சம் உலக நாட்டுத் தலைவர்களிடையே ஏற்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal