ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிகாலம் வருகிற ஜூலை மாதம் முடிவடைகிறது. இதையடுத்து அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற ஜூன் அல்லது ஜூலை மாதம் நடைபெற உள்ளது.

புதிய ஜனாதிபதியை பாராளுமன்ற எம்.பி.க்கள், மேல்சபை எம்.பிக்கள் மற்றும் மாநில சட்டசபை உறுப்பினர்கள் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுப்பார்கள்.அடுத்த ஜனாதிபதி யார்? என்று இப்போது இருந்தே எதிர்பார்ப்பு நிலவுகிறது. பாரதிய ஜனதா சார்பில் யார் நிறுத்தப்படுவார் என்பது இன்னும் முடிவாகவில்லை. (அமித்ஷா ஒருவரை மனதில் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது)

இந்த நிலையில், எதிர்க்கட்சி சார்பில் ஐக்கிய ஜனதா தள கட்சி, தலைவரும், பீகார் முதல் மந்திரியுமான நிதிஷ்குமாரை வேட்பாளராக நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நிதிஷ்குமார் தற்போது பாரதிய ஜனதா கூட்டணியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து மராட்டிய மாநில தேசியவாத காங்கிரஸ் தலைவர் நவாப் மாலிக் கூறும்போது, ‘ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சி வேட்பாளர் யார்? என்பதில் தலைவர்கள் ஒன்று கூடி முடிவு செய்வார்கள். நிதிஷ்குமாரை வேட்பாளராக நிறுத்துவது குறித்து ஆராயப்படும். ஆனால் அதற்கு முன் அவர் பாரதிய ஜனதா கூட்டணியை விட்டு வெளியே வரவேண்டும் ’ என்று தெரிவித்தார்.

வருகிற 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவை எதிர்த்து காங்கிரஸ் அல்லாத எதிர்கட்சிகள் புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி மற்றும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவரும், தெலுங்கானா முதல் மந்திரியுமான சந்திரசேகர ராவ் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இதற்காக அவர்கள் எதிர்கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். இதனால் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து நிதிஷ்குமாரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகின்றன. ஆனால் அவர்களுக்குள் இன்னும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இழுபறி நீடித்து வருகிறது. தேசியவாத காங்கிரஸ் உள்பட சில கட்சிகள் காங்கிரஸ் தலைமையில் எதிர்கட்சி கூட்டணி உருவாக வேண்டும் என்பதை விரும்புகின்றனர்.

ஆனால் மம்தா பானர்ஜி, சந்திரசேகரராவ் ஆகியோர் காங்கிரஸ் அல்லாத எதிர்கட்சிகள் கூட்டணி அமைப்பதில் உறுதியாக உள்ளனர். பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜ்பிரதாப் யாதவ் கூறும்போது, ‘கொலை வழக்கு ஒன்றில் சிக்கிய ஒருவரை எப்படி இந்தியாவின் உயர்ந்த பதவிக்கு தேர்ந்தெடுக்க முடியும்’ என கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து நிதிஷ்குமார் கூறும்போது, ‘இது பற்றி எனக்கு மனதில் எதுவும் தோன்றவில்லை’ என தெரிவித்துள்ளார்.

அரசியல் நிபுணர்கள் கூறும்போது. ‘‘ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகளிடம் ஒருமித்த கருத்து இல்லாததால் எதிர்கட்சி வேட்பாளர் வெற்றி பெற வாய்ப்பு இல்லை’’ என்றனர். எனவே அடுத்த ஜனாதிபதி யார் என்ற பரபரப்பு தற்போது எழுந்துள்ளது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal