நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் தி.மு.க. படுதோல்வியடைந்தது. இந்த நிலையில் நகர்ப்புறத் தேர்தலில் கோவை மாநகராட்சியை கைப்பற்றியாக வேண்டும் என்ற நோக்கில் தி.மு.க. செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில்தான் கோவையில் மட்டும் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் கொடுக்கப்படுவதாக, அதிமுக சட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் இன்பதுரை புகார் கொடுத்திருக்கிறார்.

தமிழகத்தில் சட்டசபை தேர்தலின் போது திமுக 500 -க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அளித்தது. இதில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தது.ஆனால் ஆட்சிக்கு வந்து 9 மாதங்களாகியும் இதுவரை ரூ 1000 வழங்கப்படவில்லை என அதிமுகவும் பாஜகவும் குற்றம்சாட்டி வருகிறார்கள். மேலும் திமுக பொய்யான வாக்குறுதிகளை கூறி ஏமாற்றி வருவதாகவும் அவர்கள் புகார் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி நகர்ப்புற தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெறுகிறது. திமுக கூட்டணி கட்சிகள், அதிமுக, தேமுதிக, அமமுக, மக்கள் நீதி மய்யம், பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் களத்தில் உள்ளன. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 உரிமைத் தொகையை திமுகவினர் வழங்குவதாக அதிமுக குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து அதிமுக சட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் இன்பதுரை கூறுகையில், ‘‘குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்களை திமுகவினர் வழங்கி வருகிறார்கள். இது குறித்து கேட்டால் விண்ணப்பங்களைதானே வழங்கி வருகிறோம் என்கிறார்கள். விண்ணப்பத்தை யார் வழங்குவது?

விண்ணப்பத்தை திமுகவை சேர்ந்த ஒருவர் மக்களுக்கு வழங்கி வருகிறார். இவர் என்ன தாசில்தாரா? கோட்டாட்சியரா?, இல்லை வருவாய் துறையில் பணிபுரிகிறாரா? இந்த விண்ணப்பங்களை வழங்கினால் இந்த தேர்தல் எப்படி நியாயமாக இருக்கும்? தொடர்ந்து விதிகளுக்கு எதிராக, விதிமுறைகளை காலில் போட்டு மிதிக்கிறது திமுக.

இதை தேர்தல் ஆணையமும் தட்டி கேட்கவில்லை. ஏற்கெனவே வாக்குறுதி அளித்து செயல்படுத்தாத ஒரு திட்டத்தை தேர்தல் விதிகள் அமலில் இருக்கும் போது முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருப்பது தேர்தல் விதிகளுக்கு புறம்பானது . முதலமைச்சரே தேர்தல் விதிகளை மீறலாமா? ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது என்றால் அப்போதே அறிவிக்க வேண்டியதுதானே. இப்போது அறிவிக்க வேண்டியதன் அவசியம் என்ன? இது முழுக்க முழுக்க அப்பட்டமான விதிமுறை மீறல். இது நியாயமான தேர்தலாக எப்படி இருக்கும்?’’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

அது போல் கோவை மாநகராட்சி 92 வார்டு சுகுணாபுரத்தில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக டாடா ஏசர் வாகனத்தில் திமுகவினரால் கொண்டு வரப்பட்ட ஆயிரக்கணக்கான ஹாட் பேக்குகளை குனியமுத்தூர் போலீசார் பறிமுதல் செய்தனர். கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி அதிமுக சார்பில் சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் இன்பதுரை கோவை மாவட்ட ஆட்சியரிடம் நள்ளிரவில் தொலைபேசியில் புகார் தெரிவித்துள்ளார்.

கோவை மக்களுக்கு மட்டும் ஆயிரம் ரூபாயா..? எங்களுக்கு இல்லையா..? என பிற மாவட்ட வாக்காளர்கள் அதிருப்தியில் இருப்பதாக, தற்போது தகவல்கள் கசிகிறது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal