மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூண் பகுதியில் தீபம் ஏற்றுவது தொடர்பான சர்ச்சையில் உச்ச நீதிமன்றம் முக்கியமான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. மலை மீதுள்ள குறிப்பிட்ட தூண் பகுதியில் நாளையே தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், இதனைச் செயல்படுத்துவதற்காக ஓய்வுபெற்ற இரண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழுவையும் நியமித்துள்ளது.

திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகப் பொறுப்புகளை மேற்கொள்வதற்காக மேகாலயா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி எஸ். வைத்தியநாதன் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி வி. பார்த்திபன் ஆகியோர் அடங்கிய குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.

இந்தக் குழு கோயில் நிர்வாகிகளாக (Receivers) செயல்பட்டு, தீபம் ஏற்றும் உத்தரவு முறையாக நிறைவேற்றப்படுவதை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபம் ஏற்றும் நிகழ்வின்போது மத்திய தொழில் பாதுகாப்புப் படையான சிஐஎஸ்எப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், மலைப்பகுதியில் கோயில் மற்றும் தர்கா அமைந்துள்ள பகுதிகளை வேறுபடுத்தும் வகையில் வேலி அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், தர்காவின் மத நடவடிக்கைகள் மற்றும் வழக்கமான செயல்பாடுகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படக்கூடாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள நிலை குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) ஆகியோர் நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இருவரும் காணொலி வாயிலாக ஆஜராக அனுமதி கோரிய நிலையில், அந்தக் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

தீபம் ஏற்றுவது தொடர்பாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், அதற்கான ஆவணங்கள் மற்றும் நிர்வாக ரீதியான விவரங்கள் குறித்து அறங்காவலர் குழு மற்றும் தலைமைச் செயலர் உள்ளிட்டோர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் நோட்டீஸ் கிடைத்த 10 நாட்களுக்குள் இந்தப் பிரமாணப் பத்திரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை தீபம் தொடர்பான நீண்டகால சர்ச்சையில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த உத்தரவுகள், தமிழக அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal