பண மோசடி விவகாரத்தில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷை போலீசார் கைது செய்தனர். திமுகவினர் புழல் சிறை முன்பு அன்பில் மகேஷ் அழைத்து வரப்பட்ட போலீஸ் வேனை வழிமறித்து தவெக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

மேலும் அவரை அழைத்து செல்ல விடாமல் பலர் வாகனத்தை தடுத்தனர். இதையடுத்து போலீசார் திமுகவினரை அப்புறப்படுத்திவிட்டு சிறைக்குள் அன்பில் மகேஷை அழைத்துச் சென்றனர். அப்போது ஒருவர் பேசுகையில், “தைரியமாக இருங்க தலைவரே… நம்ம வெளியே வந்துவிடலாம்… தலைவரே அன்றைக்கே அவனை (முதல்-அமைச்சர் விஜய்யை) கரூரில் வைத்து போட்டிருந்தால் இந்த நிலைமை வந்திருக்குமா?… தலைவரே’’ என ஆவேசமாக கூச்சலிட்டார்.

மேலும் அதே வார்த்தையை (கரூரில் வைத்து போட்டிருந்தால் இந்த நிலைமை வந்திருக்குமா?) என அருகில் இருந்த நபரிடமும் அவர் பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. திமுக நிர்வாகியின் இந்த பேச்சுக்கு பலரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

வீடியோ வைரலானதை தொடர்ந்து யார் அந்த நபர் என்பதை போலீசார் தீவிரமாக விசாரித்தனர். விசாரணையில், வேலூர் மாவட்டம் 12 ஆவது வார்டு திமுக கவுன்சிலர் டீட்டா சரவணன் என தெரியவந்தது. அவர் அன்பில் மகேஷுக்கு நெருக்கமானவர் என்றும் அவரது தீவிர ஆதரவாளர் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், தலைமறைவாக உள்ள திமுக கவுன்சிலர் டீட்டா சரவணனை போலீசார் வலைவீசி தேடி கவருகிறார்கள். அவர் மீது அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்தல், மிரட்டும் தொனியில் பேசுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் டீட்டா சரவணனை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

முதலமைச்சராக இருந்த போது மு.க.ஸ்டாலின் ‘நம்ம வீட்டு பாத்ரூமைத் தவிர்த்து மற்ற இடங்களில் நிதானமாக இருக்க வேண்டும்… பேசவேண்டும்… எல்லோர் கையில் உள்ள செல்போனிலும் கேமரா இருக்கிறது’ என்று எச்சரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal