‘‘யூனிட் ஒன்றுக்கு ரூ. 35 என அதிக விலைக்கு மின் கொள்முதல் ஒப்பந்தம் மேற்கொண்டதில் மிகப் பெரிய மெகா ஊழல் நடைபெற்றுள்ளதாக மக்கள் பேசுகின்றனர். தவெக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் ‘வெற்றி மெகா வசூல் திட்டத்தை’ தொடங்கிவிட்டது’’ என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் எதிர்பாராவிதமாக 5 மாதங்களுக்கு முன் அமைந்த தவெக கூட்டணி அரசின் அனுபவமின்மை மற்றும் நிர்வாகத் திறமையின்மை காரணமாக, அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு மாநிலம் முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது. காரணமே இல்லாமல் ஏற்பட்டுள்ள மின்சாரத் தட்டுப்பாட்டால் தமிழக மக்கள் மிகவும் அவதியுற்று வருகின்றனர். தமிழக மக்களின் இந்த சிரமங்களை தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்டு இந்த ஆட்சியாளர்கள் விஞ்ஞான முறையில் ஊழல் செய்ய முனைகிறார்களோ என்ற எண்ணம் மக்களிடம் எழுந்துள்ளது’’ என்று கூறியிருக்கிறார்.

‘‘மின்சாரக் கொள்முதலுக்கான விலை யூனிட் ஒன்றுக்கு 31.99 ரூபாய் முதல் 37 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஒரு யூனிட் மின்சாரத்தைச் சராசரியாக 35 ரூபாய் விலையில் தமிழக அரசு கொள்முதல் செய்துள்ளது. இதனிடையே திமுக ஆட்சியில் 20 ரூபாய்க்கு மின்சாரம் கொள்முதல் செய்கிறார்கள் என இப்போதைய மின்துறை அமைச்சர் 2021-ம் ஆண்டு கேள்வி எழுப்பினார். ஆனால் தற்போது த.வெ.க ஆட்சியில் 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்கிறார்கள்’’ என முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி விமர்சனம் செய்தார்.
‘‘மின்வெட்டை சமாளிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு வெளிச்சந்தையில் ஒரு யூனிட்டுக்கு சராசரியாக 35 ரூபாய் என கொள்முதல் செய்துள்ளது’’ என மின்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தெரிவித்தார்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் மின் தேவையைச் சமாளிக்கும் வகையில், வெளிச்சந்தையில் இருந்து 4500 மெகாவாட் மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் டெண்டர் கோரியிருந்தது. குறிப்பாக, மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலான உச்ச மின் தேவை நேரத்தில் 3,000 மெகாவாட் மின்சாரமும், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 2 மணி வரையிலான நேரத்தில் 1,500 மெகாவாட் மின்சாரமும் கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘‘பீக் அவர்ஸ் எனப்படும் மாலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை தான் மின்சார தேவை அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் மின்தேவை 16800 மெகாவாட்டாக இருந்தது. ஆனால் இப்போது 21700 மெகாவாட் தேவைப்படுகிறது. கிட்டதட்ட மின்தேவை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் எல் நினோ காரணமாக வெப்பம் குறையாமல் இருப்பது தான். தேசிய அளவில் மின்பற்றாக்குறை நிலவி உள்ளது. மத்திய அரசு மின்பற்றாக்குறை தொடர்பாக மாநிலங்களுக்கு முன்னதாகவே தெரிவிக்கவில்லை.
மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய 1850 மெகாவாட் கடந்த மாதம் வரவில்லை. காற்றின் வேகம் குறைந்துள்ளதால் காற்றாலை மின்சாரம் 500 மெகாவாட் தான் தற்போது வருகிறது. 3000 மெகாவாட் வராமல் உள்ளது. இதனால் தமிழ்நாட்டின் மின்தேவை திடீரென அதிகரித்துள்ளது.
இந்த விலைக்கு மின்கொள்முதல் செய்யவில்லை என்றால் மற்ற மாநிலங்களை போன்று நமக்கும் மின்பற்றாக்குறை ஏற்படும். நாள் ஒன்றுக்கு சுமார் 2-3 நேரம் மின்வெட்டு ஏற்படும் அபாயம் ஏற்படும். கேஸ் பவரில் இருந்து மின்சாரம் பெறப்படுவதால் தான் ரூ.35 ஒரு யூனிட்டுக்கு கொடுக்கப்படுகிறது. இந்த டெண்டர் வரும் 16 நாட்களுக்கு மட்டும் தான். அதாவது அக்டோபர் 15 முதல் 31 ஆம் தேதி வரை மட்டுமே. 1500 மெகாவாட் மட்டுமே நாம் கொள்முதல் செய்யப்போகிறோம். இதனால் கூடுதலாக நாள் ஒன்று 5 கோடி ரூபாய் மட்டுமே கூடுதலாக செலவாகும்’’ என்று தெரிவித்தார்.
