கூட்டணிக் கட்சிகளின் தயவில் த.வெ.க. ஆட்சி நடத்திக் கொண்டிருந்தாலும் பட்ஜெட் கூட்டத் தொடரில் தி.மு.க.வை பாடாய்ப் படுத்தி வருகிறார்கள் த.வெ.க.வினர். இதனால் உதயநிதி முதற்கொண்டு ஸ்டாலின் வரை கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில்தான் பிரதமர் வேட்பாளராக விஜய்யை முன்னிறுத்தி தவெக பிரச்சாரம் செய்து வருவதாக அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ், மீண்டும் திமுகவுக்கு தூது அனுப்பிய நிலையில் முன்னாள் முதல்வர் ஸ்டாலினோ, ‘‘காங்கிரஸ் அறிவாலயம் பக்கமே வரக் கூடாது’’ என கதவடைக்கப்பட்டு விட்டதாம்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தவெக 108 இடங்களில் மட்டுமே வென்றது. ஆனால் பெரும்பான்மைக்கு 118 தேவைப்படும் நிலையில் 5 இடங்களில் வென்றிருந்த காங்கிரஸ் ஆதரவு தந்த நிலையில் மீதமுள்ள 8 இடங்களுக்காக திமுக கூட்டணி கட்சியில் இருந்த விசிக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைந்துள்ளது. அந்த வகையில் காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளன. மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சிகள் அமைச்சரவையில் இடம் பெறவில்லை. வரும் 2029 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் விஜய்யின் செல்வாக்கை வைத்து பிரதமராகிவிடலாம் என ராகுல் காந்தி ஒரு கணக்கு போட்டுள்ளதாக தெரிகிறது. அவர்கள் அதற்காகத்தான் விஜய் முதல்வராக பதவியேற்ற விழாவிலும் கலந்து கொண்டார் என சொல்லப்படுகிறது.

இந்தியாவில் கர்நாடகா, தெலுங்கானா, இமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்துள்ளது. அது போல் ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் கூட்டணி கட்சியுடன் இணைந்து ஆட்சி செய்து வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு முதலே காங்கிரஸ் கட்சி இந்தியாவில் தனது செல்வாக்கை இழந்து தேய்ந்து கொண்டே வருவதாக சொல்லப்படுகிறது. எனினும் அக்கட்சிக்கு இரு அமைச்சர் பதவி, மாநிலங்களவையில் ஒரு இடத்தையும் தவெக வழங்கியுள்ளது.

இந்த நிலையில்தான், பிரதமராக விஜய் பதவியேற்பார் என ஜோதிடரும் தவெக எம்எல்ஏவுமான கனிமொழி சந்தோஷ் கூறியதற்கு கூட மாணிக்கம் தாகூர், “ஜோதிடர்களின் பேச்சை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்” என்றார். எல்லாவற்றுக்கு மேலாக தவெக ஆட்சியில் நீடிக்க காரணமே காங்கிரஸ்தான் என மாணிக்கம் தாகூரும் காங்கிரஸ் நிர்வாகிகளும் பேசி வருவது தவெகவுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கே இல்லாத நிலையில் ராகுலை பிரதமர் வேட்பாளர் என்பதை முன்னிறுத்த தவெக விரும்பவில்லை. இது போன்ற புகைச்சல்களுக்கு மத்தியிலும் முதல்வர் விஜய் இதை மறுக்காமல் ரசித்து கொண்டிருப்பதாகவே சொல்லப்படுகிறது. இதனால் காங்கிரஸ் கட்சியினர் அவசரப்பட்டு திமுகவை விட்டுவிட்டு வந்துவிட்டோமோ என கருதுகிறார்கள். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் மீண்டும் கூட்டணிக்கு வருவது குறித்து டெல்லியில் சில காங்கிரஸ் தலைவர்கள் கனிமொழியிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து கனிமொழியும், அண்ணன் ஸ்டாலினிடம் பேசினாராம். அப்போது ஸ்டாலின், ‘‘தேர்தல் வெற்றிக்கு பிறகு நம் கூட்டணியில் இருந்து வெளியேறிய எந்த கட்சி மீண்டும் வந்தாலும் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு திமுகவில் இடமில்லை’’ என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டாராம். இந்த தகவலை பெரும் சங்கடத்துடன், காங்கிரஸ் தலைவர்களுக்கு கனிமொழி தெரிவித்தாராம். ஆனாலும் ஸ்டாலினுக்கு இளகிய மனசு, தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருப்பதால் அவரை எப்படியும் கரைத்து விடலாம் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்களாம்.

இதற்கிடையேதான், மக்களவையில் தற்போது காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருக்கிறது. 2029 பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் எதிர்க்கட்சியாகக்கூட வந்துவிடக் கூடாது என்பதில் பா.ஜ.க. தெளிவாக காய் நகர்த்தி வருகிறதாம். எனவே, விஜய் பின்னணியில் பா.ஜ.க. இருக்கிறதா என்ற சந்தேகமும் காங்கிரஸ் தலைமைக்கு தற்போது வந்திருக்கிறதாம்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal