த.வெ.க.வை நம்பி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த அ.தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் இன்று ‘ந…தெருவில்’ நிற்கிறார்கள். ‘இடைத்தேர்தலும் நடக்கவில்லை… எம்.எல்.ஏ.வாகவும் செயல்பட முடியவில்லை…’ இதனால் விஜய் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். அந்த அதிருப்தியின் வெளிப்பாடுதான், ‘ராஜினாமாவை வாபஸ்’ பெற இசக்கி சுப்பையா முயற்சித்தார்.

‘தமிழகத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைதான், நாளை பாராளுமன்றத் தேர்தலில் த.வெ.க.வை நம்பினால் காங்கிரசுக்கு ஏற்படும்’ என்ற எச்சரிக்கையை மணியை அடித்திருக்கிறார் தேர்தல் வியூக வகுப்பாளர் சுனில் கனகோலு!

கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக அடுத்த பிரதமர் விஜய் என்று தவெக அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ-க்கள் தொடர்ச்சியாக பேசி வருகின்றனர். இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 9.2% பேர் ஆதரவு அளித்திருப்பது காங்கிரஸ் தலைமையையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. இதன் காரணமாகவே விஜய்யை கட்டுப்படுத்த மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்கரவர்த்தி இருவரும் நேரில் சென்று சந்தித்தனர்.

ஆனால் வட மாநிலங்களில் விஜய் தொடர்பாக வெளியிடப்படும் ரீல்ஸ் மில்லியன்களில் பார்வையாளர்களை அள்ளுகிறது. விஜய்யின் இந்த செயல்பாடுகளை பாஜக தலைமையும் ரசிக்கிறது. தென்னிந்தியாவில் விஜய்யின் வளர்ச்சியால், பாஜகவுக்கு லாபம் என்றே அமித்ஷா கணக்கு போடுகிறார். அதேபோல் காங்கிரஸ் தரப்பில் பேசப்பட்ட போதும், அதனை காதில் வாங்கும் நிலையில் தவெக இல்லை. கேரளா, கர்நாடகா மாநிலங்களில் தவெகவை உருவாக்க விஜய் வேகமாக காய் நகர்த்தி வருகிறார்.

இதனையறிந்த காங்கிரஸ் கட்சி தலைமை அதிருப்தியில் இருக்கிறது. அதேபோல் இந்தியா கூட்டணியில் இணைவது தொடர்பாக விஜய் இதுவரை எந்தவித வார்த்தையையும் கூறவில்லை. லோக்சபா தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் 15 சீட்கள் வரை எதிர்பார்க்கிறது. திமுக கூட்டணியில் இருந்த போது 9 இடங்கள் ஒதுக்கப்பட்டது. தவெக கூட்டணியில் 13 முதல் 15 தொகுதிகள் ஒதுக்கவில்லை என்றால், அது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் அதிருப்தியை உருவாக்கும். ஆனால் தவெகவோ 30 தொகுதிகளில் போட்டியிடும் திட்டத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படியான சூழலில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூக வகுப்பாளர் சுனில் கனகோலு ஒரு ரிப்போர்ட்டை கொடுத்துள்ளார்.

அதன்படி ‘‘இந்தியா கூட்டணியில் இணையும் எண்ணம் தவெகவுக்கு இல்லை. முதல்வர் விஜய்யை நம்பினால், எதுவும் நடக்காது. மீண்டும் திமுகவுடன் இணைவதே நல்லது. தவெக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் கர்நாடகா முதல்வர் டிகே சிவக்குமார் மூலமாகவும் சில அழுத்தம் கொடுக்க முயற்சித்து வருகிறாராம் தேர்தல் வியூக வகுப்பாளர் சுனில்.

ஆம், கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சீனியர் நிர்வாகிகள் கூட ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க தயங்கியபோது, மு.க.ஸ்டாலின் ‘ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளர்’ என முதன் முதலாக அறிவித்தார். இந்தப் பெருந்தன்மை விஜய்யிடம் இல்லை என்பதை ஆணித்தரமாக அடித்துக்கூறியிருக்கிறாராம் சுனில்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal