லண்டன் செல்லும் விஜய் தனது மனைவி சங்கீதாவையும், மகளையும் சந்திப்பாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.
தொழில் முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு ஈர்க்கும் நோக்கில், முதலமைச்சர் விஜய் வரும் 10-ம் தேதி பிரிட்டன் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு அரசு முறைப் பயணமாக இது இருக்கும் என கூறப்படுகிறது. அவருடன் தொழில்துறை உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவும் பயணிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரிட்டனில் முதலீட்டாளர்கள் மற்றும் முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்து, தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, உயர் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் குறைக்கடத்தி உள்ளிட்ட துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தப் பயணம் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், விஜய்யின் லண்டன் பயணம் குறித்த தகவல் வெளியானதுமே சமூக வலைதளங்களில் மற்றொரு விவாதமும் கிளம்பியுள்ளது. விஜய்யின் மனைவி சங்கீதா லண்டனில் வசித்து வருவதாக கூறப்படும் நிலையில், முதலமைச்சரின் இந்தப் பயணத்தின்போது இருவரும் சந்திப்பார்களா என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.
மேலும், விஜய் – சங்கீதா தம்பதியரின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அவர்கள் குறித்த விவாகரத்து வழக்கு தற்போது ஒரு முடிவை எட்டிய நிலையில், விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றிருந்தார் சங்கீதா. மீண்டும் விஜய்யுடன் சங்கீதா இணைந்து வாழ்வாரா? எப்போது சென்னைக்கு வருவார்? போன்ற கேள்விகள் விஜய் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.
விஜய்யின் மகன் இயக்கிய திரைப்படம் வெளியாகும் சூழலில் குடும்பமும் இணைந்து ஆச்சர்யத்தை கொடுக்குமா? என்ற ஆவலோடு காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்!
