‘த.வெ.க. ஆட்சியைக் கவிழ்க்க தி.மு.க. குதிரை பேரம் நடத்தியது’ என செந்தில்¢பாலாஜி ஆதரவாளர்களாகக் கூறி சிலரை கைது செய்தது காவல்துறை! ‘தமிழகத்தில் குதிரை பேரம் செய்வது விஜய்தான்’ என தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சிகளும் ஆதாரங்களுடன் குற்றஞ்சாட்டியிருப்பதுதான் விஜய்க்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது.

மாற்றுக்கட்சியிலிருந்து தவெகவில் சேரும் தலைவர்களால் தலைவலி தான் ஏற்படுகிறது என்று தனது ஆலோசகர்களிடம் கோபப்பட்டுள்ளார் முதல்வர் விஜய். அதாவது, திமுக கூட்டணியை விட்டு வெளியேறி தவெகவில் இணைந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முதல்வர் விஜய்யை சந்தித்தார். சந்திப்பை தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ”மதிமுக எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்யச் சொல்லுங்கள். அவர்கள் மீண்டும் போட்டியிடும் போது நானே பிரச்சாரம் செய்கிறேன் என தம்மிடம் விஜய் தெரிவித்தார் ” என்று போட்டுடைத்தார் வைகோ.
வைகோவின் இந்த வாக்குமூலம், தவெகவின் குதிரை பேரத்தை உறுதி செய்கிறது. அதுவும் முதல்வர் விஜய்யே குதிரை பேரத்தில் ஈடுபட்டிருப்பதும் தெரிகிறது என்று சொல்லி, குதிரை பேரத்திற்கு எதிராகவும் தவெக அரசுக்கு எதிராகவும் திமுக, அதிமுக, பாஜக கட்சிகள் வரிந்து கட்டின. கவர்னரிடம் புகார் கொடுக்கப்பட்டது. வழக்கும் போடப்பட்டுள்ளது.
வைகோவின் உளறலால் தனது அரசுக்கும் தவெக கட்சிக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது என விஜய், ஏற்கனவே வருத்தப்பட்டார். இதனை அடுத்து, வைகோவிடம் ஆலோசகர்கள் விஜய்யின் வருத்தத்தை தெரிவிக்க, உடனே, ”நான் தான் அப்படி சொன்னேன்; முதல்வர் என்னிடத்தில் அப்படி கேட்கவில்லை” என்று பல்டி அடித்தார். இந்த சர்ச்சை சற்று ஓய்ந்த நிலையில், நிம்மதி மூச்சு விட்டிருக்கிறார் விஜய். அது சில வாரங்கள் கூட நீடிக்கவில்லை. அதாவது, அதிமுக மூலம் கிடைத்த எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்து விட்ட அதிமுக மாஜி மந்திரி எம்.ஆர். விஜயபாஸ்கர், தவெகவில் அழைத்தார்கள்; நாங்கள் இணைந்தோம் என்று சொன்னார். இதுவும் ஒப்புதல் வாக்குமூலம் ஆனது.
இப்படி ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பவர்கள் சாதாரண அரசியல்வாதி கிடையாது. மக்களுக்கு அறிமுகமான, ஆளுமை செலுத்தக்கூடிய அரசியல் தலைவர்கள். அவர்களின் ஒப்புதல் வாக்குமூலத்திற்கு வலிமை இருக்கிறது என்பது சட்டத்திற்கு தெரியும். அவ்வளவு எளிதாக அவர்கள் தங்களின் வாக்கு மூலத்திலிருந்து கடந்து சென்று விட முடியாது என்பதை உணர்ந்த திமுக, மீண்டும் கவர்னரை சந்தித்து குதிரை பேரம் நடந்திருப்பதை தற்போது விஜய்பாஸ்கரும் உறுதி செய்கிறார். அதனால் நடவடிக்கை எடுங்கள் என்று புகார் கொடுத்துள்ளது. தற்போது இப்படிப்பட்ட புகார்கள் கவர்னர் மாளிகையில் எதிர்க்கட்சிகளால் குவிக்கப்படுவதை கண்டு கவர்னரும் அமைதியாக இருந்து விட முடியாது.

ஏற்கனவே வைகோவின் பேட்டி, ராஜினாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ. க்களை தவெகவில் இணைத்தது தொடர்பாக எதிர்கட்சிகள் கொடுத்த புகார்களுக்கு விஜய் அரசிடம் விளக்கம் கேட்டுள்ளார் கவர்னர். தற்போது, விஜய பாஸ்கரின் பேட்டியை வைத்து திமுக கொடுத்துள்ள புகாருக்கும் விளக்கம் கேட்டுள்ளதாம் தமிழக லோக் பவன். இந்த விவகாரமும் விஜய்யின் கவனத்துக்கு சென்ற நிலையில் தான், தனது ஆலோசகர்களிடம், கட்சிக்கு வருகிறவர்கள் எல்லாம் ஏன் இப்படி உளறுகிறார்கள். இவர்கள் ஒன்றும் விவரம் தெரியாதவர்கள் இல்லையே! இப்படிப்பேசினால் தவெக அரசுக்குத்தான் சட்ட ரீதியாக சிக்கல் வரும்ங்கிறதை ஏன் இவர்கள் அறியாதவர்களாக இருக்கிறார்கள்? என்று கோபப்பட்டு கடிந்து கொண்டிருக்கிறார். வைகோவின் பேட்டிக்கு வருத்தபட்ட விஜய், விஜயபாஸ்கரின் பேட்டிக்கு கோபப்பட்டுள்ளார் என்கிறார்கள்.
இதனைத் தொடர்ந்து எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் விஜய்யின் கோபத்தைக் கொட்டியுள்ளனர் ஆலோசகர்கள். அதன்பிறகே நேற்று, ”என்னுடய பேட்டி தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. அதிமுக தலைமை மீதுள்ள அதிருப்தியால் தான் தவெகவில் இணைந்தோம். யாருடைய அழுத்தமும் இல்லை. நாங்களே எடுத்த முடிவு” என்று பல்டி அடித்துள்ளார் விஜயபாஸ்கர். ஏற்கனவே ஏகப்பட்ட பஞ்சாயத்தில் முதல்வர் விஜய் தத்தளித்துக் கொண்டிருக்கிறார். அப்படிப்பட்ட சூழலில், தவெகவில் இணையும் தலைவர்களின் பேட்டியால், முதல்வர் விஜய்க்கு டென்சன் அதிகரிக்கிறது என்கிறார்கள்.
