எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி கோவையில் நடத்திய ஆலோசனைக் கூட்டம்தான் அ.தி.மு.க.வில் மீண்டும் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. படுதோல்வியடைந்தது. இதனால், அதிருப்தியில் இருந்த 25 எம்.எல்.ஏ.க்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமி எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என சபாநாயகரிடம் புகார் மனு அளித்தார்.

அதன் பிறகு எஸ்.பி.வேலுமணி, ‘நாங்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையைத்தான் ஏற்றுக்கொள்கிறோம்’ என திடீர் பல்டி அடித்தார். மீண்டும் அணிகள் இணைந்ததாக அறிவிக்கப்பட்டாலும், அ.தி.மு.க.வில் வெற்றி பெற்ற ஜெயக்குமார், மரகதம் குமர வேல் உள்ளிட்ட 5 எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்தனர். அடுத்தது சி.விஜயபாஸ்கரும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து த.வெ.க.வில் விஜய் முன்னிலையில் இணைவதற்கு தயாராக இருக்கிறார்.

இந்த நிலையில்தான் அதிருப்தியில் இருக்கும் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்டவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி கட்சிப் பதவி கொடுத்தார். ஆனாலும், எஸ்.பி.வேலுமணி தொடர்ச்சியாக அதிருப்தியில் இருந்து வந்தார்.

இந்த நிலையில்தான், நேற்று எஸ்.பி.வேலுமணி தனது ஆதரவாளர்களுடன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார். இந்த ஆலோசனையில், ‘‘கடந்த சட்டமன்ற தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் நம்முடன் இணைந்திருந்தால் ரிசல்ட் வேறு மாதிரி வந்திருக்கும். இப்போது வரை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குதான் மரியாதை கொடுத்து வருகிறோம். இருப்பினும் தேர்தலுக்கு பிறகு திமுகவுடன் கூட்டணி என்று சொன்னதால்தான் அதிருப்தி கிளம்பியது.

அதிமுக உருவாக்கப்பட்டதற்கான நோக்கம் என்ன? திமுக எதிர்ப்புதான். அதற்காகத்தான் எம்ஜிஆர் இந்த கட்சியை உருவாக்கினார். ஆனால், திமுகவுக்கு ஆதரவு கொடுப்பது என்கிற நிலைப்பாட்டை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இந்த பின்னணியில்தான் 47 எம்எல்ஏக்களில் 25 பேர் எங்கள் பின்னாடி வந்தார்கள். நாங்கள் அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என்று யோசித்தோம். திமுகவுடன் பயணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. 30 மாவட்ட செயலாளர்கள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை.

நான் 21 வருடங்களாக கட்சியில் மாவட்ட செயலாளராக இருந்து இருக்கிறேன். கட்சியில் சாதாரண உறுப்பினராக இருப்பேன். தப்பு பண்ணினால் கண்டிப்பாக கேட்போம். பழைய பதவியை கேட்டோம். பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று கேட்டோம். எதுவும் நடக்கவில்லை. செங்கோட்டையன் போனார்.. அதற்கு அப்புறம் ஜே.சி.டி.பிரபாகரன் போனார். அப்படி நாங்களும் போவோம் என்று நினைக்கிறார்கள். கட்சி தோற்றுக்கொண்டே வந்தால் என்ன செய்வது? ஆனால், திமுகவுடன் கூட்டணி என்று சொல்கிறவர்கள் இப்போதே கிளம்பிவிடுங்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதுவே என்னுடைய முடிவு’’ என்று பேசியிருக்கிறார்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், இந்த ஆலோசனை கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் ஜெயலலிதா, எம்ஜிஆர் படங்கள் மட்டுமே இருந்தன. எடப்பாடி பழனிசாமியின் படம் இடம்பெறிவில்லை. அப்படியெனில் அதிமுகவிலிருந்து கழன்றுக்கொள்ள எஸ்.பி.வேலுமணி திட்டமிட்டிருக்கிறாரா? என்கிற கேள்வியை அரசியல் விமர்சகர்கள் எழுப்பியிருக்கின்றனர்.

தவிர, அ.தி.மு.க.வில் இருந்து குறைந்தது 15 எம்.எல்.ஏ.க்களை த.வெ.க. பக்கம் இழுக்கும் மறைமுக வேலைகளும் நடந்து வருகிறது. காரணம், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி த.வெ.க.வுக்கு ஆதரவு கொடுத்தாலும், அவ்வப்போது சில டிமாண்டுகளை வைத்துவருவதால், தனி மெஜாரிட்டியுடன் த.வெ.க. ஆட்சியை நடத்த விரும்புகிறாராம் விஜய்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal