கேரள மாநில முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயனின் வீடு உள்ளிட்ட 12 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
‘கொச்சின் மினரல்ஸ் அண்டு ரூடைல் லிமிடெட்’ (சிஎம்ஆர்எல்) என்ற கனிம நிறுவனத்துக்கு கேரள அரசு சுரங்க அனுமதி வழங்கியதில் லஞ்சம் பெற்றது, பண மோசடி நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் பினராயி விஜயனின் மகள் டி.வீணாவின் ‘எக்ஸாலாஜிக்’ என்ற ஐடி நிறுவனத்துக்கு நேரடி தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு வைத்தன. இந்நிலையில், தற்போது அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது.
சிஎம்ஆர்எல் விவகாரத்தில் அமலாக்கத் துறை விசாரணையை ரத்து செய்ய முடியாது என கேரள உயர் நீதிமன்றம் நேற்று தெரிவித்தது. இந்த வழக்கை சிஎம்ஆர்எல் நிறுவனம் தொடுத்திருந்தது.
இந்நிலையில், இன்று (மே 27) அமலாக்கத் துறை அதிகாரிகள், முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
வீணாவின் கணவரும், முன்னாள் பொதுப்பணித் துறை அமைச்சருமான பி.ஏ.முகமது ரியாஸ் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையானது திருவனந்தபுரம், கோழிக்கோடு உள்ளிட்ட நகரங்களில் நடைபெறுகிறது.
அமலாக்கத்துறை சோதனையின் பின்னிணி..?
சிஎம்ஆர்எல் நிறுவனத்திடம் இருந்து எக்ஸாலாஜிக் நிறுவனம் ரூ.1.72 கோடியை முறைகேடாக பெற்றதாக வருமான வரி தீர்வு வாரியம் தெரிவித்தது. இதில் வீணா மட்டுமல்லாது அரசு அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
கடந்த 2023-ல் இந்த விவகாரம் முதன்முதலாக வெளிச்சத்துக்கு வந்தது. அதில் சிஎம்ஆர்எல் நிறுவனத்திடம் இருந்து 2017 முதல் 2020 வரை நிதி முறைகேடு நடந்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து அமலாக்கத் துறை, வருமான வரித்துறையினர் வீணா உட்பட பலரிடம் ஏற்கெனவே விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
