“ஆதவ் அர்ஜூனாவின் அழைப்புக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். அமைச்சரவையில் பங்கேற்பது குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும்’’ என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்த நிலையில், முதலமைச்சராக விஜய், கடந்த 10ஆம் தேதி பதவியேற்றார். அவருடன் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இந்த சூழலில், அமைச்சரவையை விரிவாக்கம் செய்யும் பணியில் தவெக ஈடுபட்டுள்ளது. இன்று ஆளுநர் அர்லேகரை முதலமைச்சர் விஜய் மற்றும் அதிகாரிகள் சந்தித்துப் பேசுவார்கள் என்று கூறப்படுகிறது. அப்போது, அமைச்சரவை விரிவாக்கம் செய்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு, புதிய அமைச்சர்கள் நாளை பதவியேற்பார்கள் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தவெக அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம் பெற வேண்டும் என்று அழைப்பு விடுத்ததோடு அது முதலமைச்சர் விஜய்யின் விருப்பம் என்றும் கூறினார்.
இந்நிலையில் காந்தி மண்டப வளாகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து இதுதொடர்பாக பேசினார். அப்போது அவர் பேசும்போது, “வேளச்சேரி வந்தபோது விஜய் விருப்பத்தை வெளிப்படுத்தினார், தற்போது தவெக வெளிப்படையாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது; அதனை மதிக்கிறோம்; இந்த அழைப்பு குறித்து முன்னணி பொறுப்பாளர்களுடன் கலந்து பேசி முடிவை அறிவிப்போம்“ என்றார்.
இடதுசாரிகள் தவெக அமைச்சரவையில் இடம்பெறவில்லை என அறிவித்தபிறகு விசிக ஆலோசிப்பது ஏன்? என்ற கேள்விக்கு தவெகவிடம் இருந்து வெளிப்படையாக அழைப்பு வந்திருப்பதால், அதுகுறித்து முன்னணி நிர்வாகிகளுடன் பேசுவது தவிர்க்க முடியாததாக இருக்கிறது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
