2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைக்க வேண்டும் என்ற முழுவீச்சுடன் களத்தில் இறங்கி வேலை பார்த்து வருகிறார் மு.க.ஸ்டாலின். இந்த நிலையில்தான் ‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்ற பரப்புரையை பிப்ரவரி 1ம் தேதி முதல் தொடங்குவதாக தி.மு.க. தலைமை அறிவித்திருக்கிறது.

சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருக்கும் சூழலில், திமுக தரப்பில் அடுத்தடுத்து மண்டல மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே இளைஞரணி மண்டல மாநாடு நடத்தப்பட்ட சூழலில், பின்னர் திருப்பூரில் திமுக மகளிர் அணி மண்டல மாநாடு நடத்தப்பட்டது. நேற்று தஞ்சாவூரில் மகளிர் அணி மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதனையடுத்து திமுக அடுத்தக்கட்ட பிரச்சாரத் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. பிப்ரவரி 1ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளில் தமிழ்நாடு தலைகுனியாது என்ற பெயரில் திமுக பிரச்சாரக் கூட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில், “தமிழ்நாடு தலைகுனியாது” என்ற பரப்புரை பிப்ரவரி மாதம் தொடங்கப்பட உள்ளது.

இந்த பரப்புரையின் கீழ், முதல்வர் ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 நட்சத்திரப் பரப்புரையாளர்கள், தமிழகத்திலுள்ள 234 சட்டசபைத் தொகுதிகளிலும், பிப்ரவரி மாதம் முழுவதும் தீவிரமான பரப்புரை பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்கள். இந்த பரப்புரையின் போது, ஒவ்வொரு சட்டசபைத் தொகுதியிலும், ஒரு பொதுக்கூட்டம் நடத்திட வேண்டும். மேலும், ஒவ்வொரு சட்டசபைத் தொகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்கள், இளைஞர்கள், மாணவர்கள், தன்னார்வ அமைப்புகள், தொழிற்சங்கங்கள், தொழில் முனைவோர், கல்வியாளர்கள் உள்ளிட்டோரை ஒரே இடத்தில் அழைத்து, மண்டலப் பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் நட்சத்திரப் பரப்புரையாளர்கள் அரசின் சாதனைகளை எடுத்துக்கூறியும், கலந்துகொள்வோரின் எதிர்பார்ப்புகள், கோரிக்கைகள் குறித்தும் கலந்துரையாடல் மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு தலைகுனியாது” பரப்புரையை வெற்றியடையச் செய்திடும் வகையில் பரப்புரை குறித்து தக்க விளம்பரங்களைச் செய்திடவும், தொகுதிகளில் தேவையான ஏற்பாடுகளைச் செய்திடவும் மண்டலப் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் / பொறுப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பிப்ரவரி 1 முதல் 28 வரை ஒவ்வொரு தொகுதியிலும் பிரச்சாரக் கூட்டம் நடத்த வேண்டிய இடம் மற்றும் கலந்து கொள்ளும் நட்சத்திர பேச்சாளர்களின் அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் திருச்சி சிவா, ஜெகத்ரட்சகன், எழியன் நாகநாதன், கார்த்திகேய சிவசேனாபதி, திண்டுக்கல் ஐ.லியோனி, தமிழச்சி தங்கபாண்டியன், கோவி செழியன், தயாநிதி மாறன், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், எம்எம் அப்துல்லா, மனோஜ் பாண்டியன், கலாநிதி வீராசாமி, மருது அழகுராஜ் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிர்வாகிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal