அ.தி.மு.க. குறித்து விஜய்யிடம் திருமா கேள்வி எழுப்பியிருப்பது, இருகட்சிகளும் கைகோர்த்துவிடுமோ என்ற எண்ணத்தில்தான் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்!
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் திருச்சியில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: ‘‘கச்சத்தீவை மீட்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தியும், இந்திய அரசு எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை என்பது வேதனைக்குரியது. தமிழகத்தில் சங்பரிவார் அரசியல் எந்த வகையிலும் நுழையாமல் தடுக்க, அனைத்து ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள வேண்டும்.
நடிகர் விஜய்க்கு மத்திய அரசு ஏற்கெனவே ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. தாமதமாக தற்போது அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு மத்தியஅரசு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கி உள்ளது. இதை நாங்கள் வரவேற்கிறோம். அந்தக் கூட்டணியில் பெரிய கட்சி அதிமுகதான். ஆனாலும், தேர்தலுக்குப் பின்புதான் முதல்வரை தேர்ந்தெடுப்போம் என்று சொல்லக்கூடிய நிலை இருக்கிறது. இது தொடர்பாக பழனிசாமிதான்விளக்கம் அளிக்க வேண்டும்.
திமுக, பாஜகவை கொள்கை எதிரி என்று கூறிய தவெக தலைவர் விஜய், அதிமுக பற்றி எதுவும் கூறவில்லை. எனில், அவர் அதிமுகவை தோழமைக் கட்சியாகப் பார்க்கிறாரா? இந்தக் கேள்விக்கு விஜய் விடையளிக்க வேண்டும்’’ இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பை திருமா வரவேற்றிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி மீது திருமாவுக்கு திடீர் கரிசனம் ஏன் என்ற கேள்வியை எழுப்புவதோ? அ.தி.மு.க. & த.வெ.க. கூட்டணி அமைந்துவிடுமோ என்ற கேள்வியும் திருமா மனதிற்குள் எழுந்திருப்பதால்தான், ‘அ.தி.மு.க.வை விஜய் தோழமை கட்சியாகப் பார்க்கிறாரா?’ என கேள்வி எழுப்பியிருக்கிறார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்!