தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருக்கும் நிலையில் ஆளும் தி.மு.க., எதிர்க்கட்சியான அ.தி.மு.க. களத்தில் இறங்கிவிட்டன. இளைஞர்கள் செல்வாக்குடன் கட்சி ஆரம்பித்த விஜய்யும் தனது கூட்டணி நிலைப்பாட்டை அறிவித்த நிலையில் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

ஆளும் தி.மு.க. அரசு மீது கடுமையான விமர்சனங்கள், அதிருப்திகள் இருந்தாலும், ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற முழக்கத்தோடு ஜூலை 1ம் தேதி முதல் மக்களை சந்தித்து வருகின்றனர். முதல்வரும் நேரடியாகவே சிலரிடம் பேசுகிறார். மக்களிடையே அதிருப்தி இருகிறதா என்பதை மு.க.ஸ்டாலின் நேரடியாகவே ஆய்வு செய்து வருகிறார். இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமியும் ‘மக்களை காப்போம்… தமிழகத்தை மீட்போம்… ’ என்ற முழக்கத்தோடு சுற்றுப் பயணத்தை நாளை முதல் தொடங்குகிறார்.

எடப்பாடி பழனிசாமிக்கு இந்த சுற்றுப் பயணம் எந்தளவிற்கு கைகொடுக்கும் என தமிழக அரசியல் பார்வையாளர்கள் சிலரிடம் பேசினோம்.

‘‘சார், ஜெயலலிதா இருந்த வரை தமிழகத்தில் அதிமுகவுக்குதான் வாக்கு வங்கி அதிகமாக இருந்தது. அவருக்கு பின்னர் வந்த எடப்பாடி பழனிசாமி, முதல்வராக இருந்த காலத்தில் வாக்குகள் கொஞ்சம் சரிந்தாலும், பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை. ஆனால் சமீப காலமாக கூட்டணி கணக்குகளால் அதிமுக ரொம்பவே சோர்வாகியுள்ளது.

இந்நிலையில், சோர்வை நீக்கி கட்சியினரை உற்சாகப்படுத்தி தேர்தல் களத்திற்கு முழு வேகத்தில் அவர்களை தயார்படுத்தும் பணியில் எடப்பாடி பழனிசாமி இறங்கியுள்ளார். இதற்காக நாளை முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். ஜூலை 7ம் தேதி தொடங்கி, 21ம் தேதி வரை எடப்பாடி சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார். இந்த பயணத்தில் 34 தொகுதிகளில் மக்களையும் கட்சியின் நிர்வாகிகளையும் சந்திக்கிறார். கோவையில்தான் இந்த பயணம் நாளை தொடங்குகிறது.

கோவை நல்ல தொடக்கம்தான். கொங்கு மாவட்டங்களின் மையமாகவும், பாஜக ஆதிக்கமும் சற்று இருக்கும் இடம் இது. எனவே இதையெல்லாம் கணக்கில் கொண்டுதான் கோவை முதல் மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. கோவையில் தொடங்கும் பயணம் கடலூர், விழுப்புரம், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் என மொத்தம் 7 மாவட்டங்களில் நீள்கிறது. டெல்டா மாவட்டங்களில் அதிமுகவுக்கு என பெரியதாக வாக்கு வங்கி கிடையாது. இருப்பினும் இது வெறும் தொடக்கம்தான். தேர்தல் நெருங்கும் நேரத்தில் கொங்கு மாவட்டங்களில் சுற்றுப்பயணத்தை எடப்பாடி பழனிசாமி தீவிரப்படுத்த வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் இந்த தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இருப்பதால் அதிமுக தொண்டர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. நமக்குதான் தனியாக வாக்கு வங்கி இருக்கிறதே எதற்காக பாஜகவுடன் கூட்டணி என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், கட்சியின் சின்னம், பொதுச் செயலாளர் பொறுப்பு உள்ளிட்டவற்றின் பிடி பாஜகவிடம் இருப்பதால்தான் இந்த கூட்டணி கணக்கு என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

சரி எது எப்படியோ இந்த தேர்தலில் அதிமுகவுக்கு எடப்பாடியின் சுற்றுப்பயணம் கை கொடுக்குமா? என்பது கேள்வி. அதேபோல இந்த தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணியின் நிலை என்ன என்றும் கேள்வி எழுந்திருக்கிறது. கடந்த தேர்தலில் தேமுதிகவுடன் அதிமுக கூட்டணி வைத்திருந்தது. அப்போது ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை தொகுதி என்று உறுதியளிக்கப்பட்டிருந்தது.

ஆனால், சமீபத்தில் மாநிலங்களவைக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், அது தேமுதிகவுக்கு ஒதுக்கப்படவில்லை. எனவே அக்கட்சி அதிருப்பதியில் இருக்கிறது. இதனையும் சமாளித்து எடப்பாடி தேர்தலில் கொடியை நாட்டுவாரா என்று கேள்வி எழுந்திருக்கிறது. எடப்பாடி தலைமையேற்ற பின்னர் அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வியை சந்தித்து வருகிறது. இந்த தேர்தலில் பெற்றிப்பெற்று தன்னுடைய தலைமையை எடப்பாடி நிரூபிப்பாரா? என்று கேள்வி எழுந்திருக்கிறது.

திமுக தலைமையிலான தமிழக அரசு சில விஷயங்களில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கிறது. குறிப்பாக காவல்நிலைய மரணங்கள் தொடர்பான விவகாரம் திமுகவுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அரசு ஊழியர்களுக்கு கொடுத்த வாக்குறுதி, பழைய பென்சன் திட்டம், நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதீத ஆர்வம் உள்ளிட்டவை திமுக கூட்டணி கட்சிகளாலே எதிர்ப்பை சந்தித்து வருகிறது.

இந்த அதிருப்பதியை அதிமுக சரியாக பயன்படுத்திக்கொள்ளுமா? என்றும் கேள்வி எழுந்திருக்கிறது. எனினும் எடப்பாடி பழனிசாமியின் இந்த சுற்றுப் பயணம் சோர்வில் இருக்கும் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. எனவே, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு எடப்பாடியின் சுற்றுப்பயணம் ஓரளவு கைகொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal