கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியைப் பிடிக்க ‘மக்கள் நலக் கூட்டணி’ (விஜயகாந்த் தலைமையில்)எப்படி உதவியதோ, அதே போல் த.வெ.க. தலைமையிலான மூன்றாவது அணி மீண்டும் தி.மு.க. ஆட்சியைப் பிடிக்க உதவிவிடும் என்ற நிலையில், அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

தவெக தலைமையில் கூட்டணி அமைக்கப்படும். முதல்வர் வேட்பாளராக விஜய் நிறுத்தப்படுவார். அதிமுக, பாஜவுடன் கூட்டணி கிடையாது என்று தவெக செயற்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதன் மூலம் தமிழகத்தில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் செயற்குழு கூட்டம் சென்னை அடுத்த பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கட்சியின் தலைவர் நடிகர் விஜய் தலைமை வகித்தார். கூட்டத்தில், செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 1,200 பேர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்த தீர்மானங்களை விஜய் வாசித்தார். அதில், முதல் தீர்மானமாக பரந்தூர் மக்கள் உள்பட விவசாயிகளின் நலன் மற்றும் உரிமைக்காக தமிழக வெற்றிக் கழகம் என்றும் துணை நிற்கும். கொள்கை எதிரிகளுடனோ, பிளவுவாத சக்திகளுடனோ என்றும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூட்டணி இல்லை. விவசாயிகள் போராட்டத்திற்கு எதிரான அரசின் அதிகார மீறலை கண்டிக்கிறோம். மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்தை திரும்பப் பெற வேண்டும். நெல் மற்றும் கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். பெரும் நட்டத்தை சந்தித்துள்ள மா விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், மலைக்கோட்டையில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும்.

என்எல்சிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு முழுமையான இழப்பீட்டுத் தொகை, குடும்பத்தினருக்கு வேலை வாய்ப்பு மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரத் தொழிலாளர்களாக்க வலியுறுத்துகிறோம். தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். இரு மொழிக் கொள்கை, தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண கச்சத்தீவை குத்தகை அடிப்டையில் ஒன்றிய அரசு கேட்டுப் பெற வேண்டும், தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடத்துவதன் வாயிலாக சிறுபான்மையினர் வாக்குகளை குறைக்க முயற்சிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.

கீழடியில் தமிழர் நாகரிகத்தை மூடி மறைக்கும் ஒன்றிய பாஜ அரசுக்கு கண்டனம், தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு கண்டனம், பெரியார், அண்ணாவை அவமதிக்கும் பாஜவின் பிளவுவாத அரசியலை கண்டிக்கிறோம் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர், 2026 சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய். த.வெ.க தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும். தேர்தல் கூட்டணி குறித்த முடிவுகளை எடுப்பதற்கு த.வெ.க தலைவர் விஜய்க்கு முழு அதிகாரம் உள்ளது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் ஆகஸ்ட் மாதம், த.வெ.க மாநில மாநாடு நடத்தவும், செப்டம்பர் முதல் டிசம்பர் வரை விஜய் சுற்றுப்பயணம் தொடங்கவும் தீர்மானிக்கப்பட்டது.

கூட்டத்தில் விஜய் பேசியதாவது: மலிவான அரசியல் ஆதாயத்திற்காக மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தி, மக்களிடையே வேற்றுமையை விதைத்து அதில் குளிர்காய நினைக்கிறது பாஜ. அவர்களுடைய இந்த விஷமத்தனமான வேலைகள் வேறு எங்கு வேண்டுமானாலும் எடுபடலாம். தமிழகத்தில் ஒருபோதும் எடுபடாது. சமூக நீதியும், நல்லிணக்கமும், சகோதரத்துவமும், சமத்துவமும் ஆழமாக வேரூன்றிய மண் இந்த தமிழ்நாட்டு மண். எனவே இங்கே தந்தை பெரியாரை அவமதித்தோ, அறிஞர் அண்ணாவை அவதூறுக்கு உள்ளாக்கியோ தமிழ்நாட்டில் உள்ள மதிப்பிற்குரிய தலைவர்களை வைத்து அரசியல் செய்ய நினைத்தால் அதனால் பாஜவால் ஒருபோதும் வெற்றி பெற இயலாது.

கொள்கை எதிரிகள், பிளவுவாத சக்திகளுடன் என்றைக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூட்டணி இல்லை என்பதில் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாக இருக்கிறது. கூட்டணி என்றாலும் தவெக தலைமையில் அமையும் கூட்டணி திமுக, பாஜவுக்கு எதிராகத்தான் இருக்கும் என்பதையும், அதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதையும் உறுதிபட செயற்குழு வாயிலாக தெரிவித்துக் கொள்கிறோம். இது இறுதியான தீர்மானம் அல்ல. உறுதியான தீர்மானம். இவ்வாறு விஜய் பேசினார்.

வரும் 2026 சட்டசபை தேர்தலில் ஏற்கனவே தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய கட்சிகளின் தலைமையில் கூட்டணி அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக, தவாக, கொமதேக, மமக ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதிமுக கூட்டணியில் பாஜ மட்டுமே தற்போது உறுதியாகியுள்ளது. மற்றவை எல்லாம் பாஜ ஆதரவு பெற்ற சிறிய கட்சிகள். பாமக இன்னும் தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. அதேநேரத்தில் விஜய்யின் தவெகவை இழுக்க பாஜவும், அதிமுகவும் தீவிரம் காட்டின.

ஆனால் தவெக தலைமையில் கூட்டணி அமைக்கப்படும், முதல்வர் வேட்பாளராக விஜய் முன்னிறுத்தப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளதன் மூலம் அதிமுக கூட்டணியில் விஜய் கட்சி இடம்பெறாது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. திமுக, அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது விஜயும் அறிவித்துள்ளதால், தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் மும்முனை போட்டி ஏற்படுவது உறுதியாகியுள்ளது. அதேநேரத்தில் விஜய், கூட்டணிக்கு வருவார் என்று எதிர்பார்த்து காத்திருந்த அதிமுக, பாஜவினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நடிகர் விஜய்யின் இந்த முடிவு கொள்கை எதிரியான தி.மு.க.வை மீண்டும் அரியணையில் அமர்த்த உதவிவிடும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal