பாஜக தேசியத் தலைவர் பதவியை கட்சியின் ஒரு பெண் ஆளுமைக்கு கொடுக்க ஆர்எஸ்எஸ் ஒப்புதல் தெரிவித்தவிட்ட நிலையில், வரலாற்றில் இடம்பிடிக்கக் கூடிய அந்தப் பதவிக்கான போட்டியில் மூன்று பெண் தலைவர்களின் பெயர் அடிபடுகிறது. மத்திய நிதியமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமன், பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் ஆந்திர பாஜகவின் முன்னாள் தலைவர் புரந்தரேஸ்வரி ஆகியோர் அந்தப் போட்டியில் உள்ளனர்.

பாஜக தேசியத் தலைவராக உள்ள ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் ஜனவரி 2023-ம் ஆண்டே முடிந்துவிட்டது. ஆனால், மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு அது 2024 வரை நீட்டிகப்பட்டது. பாஜக மூன்றாவது இன்னிங்ஸின் ஓராண்டே முடிந்துவிட்ட நிலையில் தான் கட்சிக்கு புதிய தேசியத் தலைவரை தேர்வு செய்வது தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளது. அதிலும், பாஜக தேசியத் தலைவராக ஒரு பெண் ஆளுமையை நியமித்து வரலாறு படைக்க ஆர்எஸ்எஸ் பச்சைக்கொடி காட்டியுள்ளதால், இந்தத் தேர்வு பரபரப்பை கூட்டியுள்ளது.

இதற்கிடையில்தான் அண்மையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா, தேசிய பொதுச் செயலாளர் பிஎல் சந்தோஷ் ஆகியோர் டெல்லியில் உள்ள பாஜக தேசிய தலைமையகத்தில் சந்தித்து நீண்ட நேரம் ஆலோசித்தார்.

தேசியத் தலைவர் பதவிக்கான போட்டியில் வானதி சீனிவாசன், புரந்தரேஸ்வரி இருந்தாலும் கூட நிர்மலா சீதாராமனின் பரந்துபட்ட அனுபவம், தலைமைத்துவ திறமையினால் அவருக்கு கூடுதல் வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது.

மேலும், நிர்மலா சீதாராமனை பாஜக தேசியத் தலைவராக்குவது தென்னிந்தியாவில் பாஜக மேலும் வலுவாக காலூன்ற வழிவகுக்கும் என்றும் நம்பப்படுகிறது. நிர்மலா சீதாராமன் ஏற்கெனவே பாதுகாப்பு அமைச்சராக இருந்துள்ளார். கட்சியில் நீண்ட பாரம்பரியம் அவருக்கு இருக்கிறது. அதுமட்டுமின்றி, தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படுவது பற்றி பேச்சுக்கள் எழுந்துவரும் சூழலில், நிர்மலா சீதாராமனை பாஜக தேசியத் தலைவராக்குவது மக்களவையில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு என்பதை முன்னெடுக்க தோதாக இருக்கும் என்று கட்சி வட்டாரங்கள் நம்புகின்றன. இதுபோன்ற காரணங்களாலேயே நிர்மலா இந்த ரேஸில் முந்துகிறார்.

நிர்மலாவுக்கு அடுத்த நிலையில் புரந்தரேஸ்வரியின் பெயர் உள்ளது. இவர் ஆந்திர மாநில பாஜக முன்னாள் தலைவர். அரசியலில் தனக்கென தனி இடம் வைத்துள்ளார். பன்மொழி குறிப்பாக தென்மாநில மொழிகளில் தேர்ந்தவர். ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து வெளிநாடுகளுக்கு விளக்கச் சென்ற எம்.பி.க்கள் அடங்கிய பிரதிநிதிகள் குழுவில் புரந்தரேஸ்வரியும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal