‘உடன்பிறப்பே வா’ என திமுக 2026 தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில், அதிமுகவும் தனது கட்சியை பலப்படுத்தி சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகி வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள், பூத் கமிட்டியின் மாவட்ட பொறுப்பாளர்களுடன் இந்த வாரம் ஆலோசனை நடத்தி முடித்திருந்தார்.
கடந்த ஜனவரி மாதம் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக நிர்வாகிகளிடையே ஆலோசனை நடத்திய நிலையில், அதிமுகவில் அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், ஜூலை 10ஆம் தேதிக்குள் அனைத்து பூத் கமிட்டி நிர்வாகிகளையும் நியமித்து அதன் பட்டியலை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
குறிப்பாக புதிதாக நியமிக்கும் பூத் கமிட்டி நிர்வாகிகள் மீது எவ்வித வழக்குகளும், குற்றப்பின்னணிகளும் இருக்கக் கூடாது என எடப்பாடி தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. மேலும் வரும் ஜூலை 7ஆம் தேதி முதல் எடப்பாடி பழனிசாமி கோவை மாவட்டத்திலிருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்கவிருக்கிறார் என அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில் தான் இந்து முன்னணி நடத்திய முருகர் பக்தர்கள் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கலந்துகொண்டது சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தான் ஆட்சி அமைக்கும் அதில் பாஜக அங்கம் வகிக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது, அதிமுக தொண்டர்கள் ரசிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி சென்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசியுள்ளார். அவருடன் தமிழக பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணைப்பு பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோரும் உடன் சென்று பாஜகவின் மாநில நிர்வாகிகள் பட்டியலுக்கு சம்மதத்தை பெற்றுள்ளார்கள். மேலும் அண்மையில் நடந்த முருகன் பக்தர்கள் மாநாடு குறித்து ஜே.பி.நாட்டா கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.
அதேபோல கூட்டணி விவகாரங்கள் தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து அங்கு ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது. அதிமுக பாஜக கூட்டணி மீண்டும் உருவாகி மூன்று மாதங்கள் ஆன நிலையிலும் தற்போது வரை எந்த ஒரு இடத்திலும் இந்த கூட்டணி தங்களை வலுவாக காட்டிக் கொள்ளவில்லை. அதற்கான முயற்சிகளை எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள வேண்டும் என்றும் ஒருங்கிணைந்த அதிமுக மீண்டும் உருவானால் தேர்தலில் திமுகவிற்கு கடுமையான ஓர் எதிர்ப்பை அதிமுகவால் கொடுக்க முடியும் எனவும் பேசியதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.