கலைஞரின் பிறந்தநாளையொட்டி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் மகனான இன்பநிதிக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
முதல்வர் ஸ்டாலின் பேரனும், துணை முதல்வர் உதயநிதியின் மகனுமான இன்பநிதி, (வயது21), கருணாநிதி பிறந்த நாளான கடந்த 3ம் தேதி, கலைஞர் ‘டிவி’யின் நிர்வாக பொறுப்பில் சேர்ந்துள்ளார்.
ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் நிதி நிர்வாகம் தொடர்பான பட்டப் படிப்பை இன்பநிதி முடித்துள்ளார். கடந்த மாதம் 3ம் தேதி, தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் ‘டிவி’ அலுவலகத்திற்கு, இன்பநிதியை அவரது தாய் கிருத்திகா அழைத்து வந்தார்.
முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்காவின் சகோதரி மகன் கார்த்திகேயன், அந்த நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக தற்போது இருக்கிறார். அவரது அறையில் அமைக்கப்பட்ட அலுவலகத்தில், மகன் இன்பநிதியை அமர வைத்து, அவருக்கு கிருத்திகா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிறுவனத்தின் நிதி நிர்வாகப் பணிகள் குறித்து, அங்கு பணியாற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் தினமும் இன்பநிதி ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அடுத்தடுத்து அரசியல் களத்திலும் இன்பநிதி அடியெடுத்து வைக்கலாம் என்கிறார்கள் உடன் பிறப்புக்கள்!