அ.தி.மு.க – பா.ஜ.க. கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தும் வகையில் தொடர்ச்சியாக அண்ணாமலை விமர்சனம் செய்து வருகிறார்.
இந்த நிலையில்தான், ‘‘அதிமுக குறித்து அண்ணாமலை விமர்சனம் செய்திருப்பது கட்சியின் கருத்து அல்ல’’ என, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று மேலும் கூறியதாவது: திமுக கூட்டணி உறுதியாக இருக்கிறது என்கிறார்கள். ஆனால், அந்த கூட்டணி உதிர்ந்து போகிற நிலையில்தான் உள்ளது. கூட்டணி கட்சியாக இருந்தாலும் கூட கொடியேற்றுவதற்கு அனுமதி கிடைப்பதில் சிரமம் இருக்கிறது என திருமாவளவன் கூறுகிறார். ஆனாலும், அவர் அந்த கூட்டணியில்தான் ஒட்டிக் கொண்டிருக்கிறார். திமுக இன்னும் பல வாக்குறுதிகளை நிறை வேற்றவில்லை என கூட்டணி கட்சியினரே சொல்கிறார்கள்.
கூட்டணி கட்சியினர் திமுகவை கேள்வி கேட்க தொடங்கிவிட்டார்கள். மக்களிடம் வாக்கு கேட்டு வந்தால், மக்களே கேள்வி கேட்பார்கள். எனவே, அமித் ஷா கூறியதுபோல, திமுக கூட்டணி மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது என்பதை உறுதியாக சொல்கிறேன். அதிமுக – பாஜக கூட்டணி பலமான கூட்டணி. கூட்டணி குறித்து அமித் ஷா கூறியது தான் கட்சியின் நிலைப்பாடு.
அதிமுக குறித்து அண்ணாமலை விமர்சனம் செய்திருப்பது அவரது சொந்த கருத்துதானே தவிர, கட்சியின் கருத்து கிடையாது. அதிமுக – பாஜக கூட்டணி குறித்து அமித் ஷா, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட அதிகாரப்பூர்வமான தலைவர்கள் சொல்வது தான் கட்சியின் கருத்து.
அண்ணாமலை சொல்வது அவரது தனிப்பட்ட கருத்து. எனவே, தனிப்பட்ட கருத்துக்களுக்கு நான் விமர்சனம் செய்வதில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் யாரெல்லாம் இணைவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இவ்வாறு அவர் கூறினார்.