பணமோசடி, கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகியும், ரவுடியுமான ‘மிளகாய் பொடி’ வெங்கடேசன் பொன்னேரி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் சேர்த்து 60க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை பாடியநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் கே.ஆர்.வெங்கடேசன் (எ) மிளகாய் பொடி வெங்கடேசன். ரௌடி வெங்கடேசன் மீது தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா என பல்வேறு மாநிலங்களில் செம்மரம் கடத்தியதாகவும், அதிகாரிகளை தாக்கியதாகவும், மிரட்டல், கட்டப் பஞ்சாயத்துகளில் ஈடுபட்டதாகவும் 60 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அதில் ஆந்திரா, தெலுங்கானாவில் செம்மரக் கட்டைகள் கடத்தல் வழக்குகள் பல நிலுவையில் உள்ளன. ஆந்திரா போலீசாரால் பலமுறை கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
இவர், ஆந்திராவில் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக உள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் ஆவடி போலீசாரால் கைது செய்யப்பட்டு, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டார். இவர் ரவுடிகள் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளார்.
மிளகாய்பொடி வெங்கடேசன் பாஜகவில் இணைந்தார். கட்சியில் சேர்ந்த உடனேயே மிளகாய்பொடி வெங்கடேசன் கட்சி நிதியாக ரூ.50 லட்சம் வழங்கியதாக கூறப்படுகிறது. அதற்கு பலனாக பாஜக தலைமை, மிளகாய்பொடி வெங்கடேசனுக்கு பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில செயலாளர் பதவி வழங்கியது.
இந்நிலையில், கடந்த 7 ஆம் தேதி மதுரை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க பாஜவில் உள்ள முக்கிய தலைவர்கள் போட்டி போட்டு விருப்பம் தெரிவித்தனர். இந்நிலையில், முக்கிய நிர்வாகிகள் ஆதரவுடன் அமித்ஷாவை வரவேற்க நியமிக்கப்பட்ட 10 பேர் கொண்ட குழுவில் இடம்பெற்றார் மிளகாய் பொடி வெங்கடேசன்.
மிளகாய் பொடி வெங்கடேசன், அமித்ஷாவை மதுரை விமான நிலையத்தில் சால்வை கொடுத்து வரவேற்றார். செம்மரக்கட்டை கடத்தல் உள்பட 60க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் பட்டியலில் உள்ளவரை அமித்ஷா சந்தித்த விவகாரம் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.
அமித்ஷாவை சந்தித்த புகைப்படத்தை தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்திலும் வெளியிட்டிருந்தார் மிளகாய் பொடி வெங்கடேசன். அதில், ஆவடி காவல்துறை, தமிழ்நாடு காவல்துறை, ஆந்திர காவல்துறை, தெலுங்கானா காவல்துறை என அனைவரையும் டேக் செய்திருந்தார்.