வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சிகளும் தயராகி வருகின்றன. ஆளும் தி.மு.க.வோ ‘விட்டமினை’ வாரியிறைத்து வருகிறது. ஆனால், தமிழக பா.ஜ.க.வில் உள்ள இரண்டாம், மூன்றாம் ஏன் முதற்கட்ட நிர்வாகிகள் கூட சோர்வடைந்து இருக்கின்றனர்.

தமிழக பா.ஜ.க.நிர்வாகிகள் ஏன் சோர்வடைந்து இருக்கிறார்கள் என்பது பற்றி சிலரிடம் பேசினோம்.

‘‘சார், தமிழகத்தைப் பொறுத்தளவில் தி.மு.க., அ.தி.மு.க. இரண்டும் மாறி மாறி ஆட்சியில் இருப்பதால் அக்கட்சி நிர்வாகிகள் தங்களை வளப்படுத்திக்கொள்கின்றனர். சிலர், கட்சி காசில் கட்சிக்காக உழைத்து வருகின்றனர். தங்களது சொந்தக் காசை இழப்பதில்லை.

ஆனால், தமிழக பா.ஜ.க.வைப் பொறுத்தளவில் தலைவராக இருந்தவர்களும் சரி, இருப்பவர்களும் சரி, பெரிதாக நிர்வாகிகளுக்காக எந்த செலவும் செய்வதில்லை. நிர்வாகிகளும், தொண்டர்களும் சொந்தக் காசை செலவு செய்துதான் மாவட்ட, ஒன்றிய கூட்டங்களுக்கு சென்று வருகிறோம். மத்தியில் எங்களுடைய ஆட்சிதான். அதனால் எங்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. அதற்காக நாங்கள் எங்களுடைய காசை எவ்வளவு நாளைக்கு செலவு செய்யமுடியும்.

தமிழகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதற்காக எல்.முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி கொடுத்திருக்கிறார்கள். ஆனால், அவராவது கட்சி நிர்வாகிகளுக்கு ‘ஏதாவது’ செய்யலாம். ஆனால், அவரும் கண்டுகொள்வதில்லை. இதனால்தான் தொண்டர்கள் சோர்வில் உள்ளன. தமிழகம் சார்பில் ஒரு மத்திய அமைச்சர் இருந்தும், எங்களுக்கு எந்த உதவியும் கிடைப்பதில்லை.

தவிர, தொண்டர்களுக்கு எதும் செய்யாத நிலையிலும், உட்கட்சி பூசலிலும், உள்குத்து அரசியலிரும் முன்னிலை வகிக்கின்றனர் முக்கிய நிர்வாகிகள். இதனால்தான் தொண்டர்கள் மேலும் சோர்வடைந்து இருக்கின்றனர்’’ என்று புலம்பித் தவித்தனர்.

இதே நிலை நீடித்தால், 2026 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வின் அடுத்த கட்ட நிர்வாகிகள் எந்தளவிற்கு தேர்தல் வேலைகளைப் பார்ப்பார்கள் என்பது கேள்விக்குறிதான்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal