தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை மரியாதை குறைவாக பேசுவதற்கு ஆதவ் அர்ஜுனாவுக்கு எந்தவித தகுதியும் இல்லை என நடிகை கவுதமி காட்டமாக தெரிவித்துள்ளார்.

சீர்காழி கோயிலுக்கு வந்த நடிகை கவுதமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், எடப்பாடி பழனிசாமியை ஆதவ் அர்ஜுனா பேசிய வார்த்தைகளும் பேசிய விதமும் பலவிதத்தில் மிகவும் தவறான விஷயம்.

எடப்பாடியை விட ஆதவ் அர்ஜுனா வயதில் சிறியவர். தமிழ் மண்ணில் பிறந்து இந்த கலாச்சாரத்தில் வளர்ந்தவர்கள் முதலில் கற்று கொள்வது பெரியவர்களுக்கு மரியாதை கொடுப்பது! எடப்பாடி பழனிசாமியை விமர்சிக்கக் கூடிய தகுதி இல்லை. அவருக்கு தகுதி இருக்கானு கூட நான் கேட்க மாட்டேன். அவருக்கு தகுதியே இல்லை. ஆதவ் அர்ஜுனா, அரசியலில் ஒழுங்காக காலே எடுத்து வைக்கவில்லை. இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கு. அப்படியிருக்கும் போது அரசியலில் இத்தனை வருஷமாக இருந்து 4 ஆண்டுகள் முதல்வராக இருந்து வெற்றிகரமாக பல்வேறு சாதனைகளை புரிந்தவர் எடப்பாடி.

மேலும் எல்லாரையும் ஒருங்கிணைத்து கட்சியின் பொதுச் செயலாளராக உள்ளார். அடிமட்டத்தில் இருந்து இத்தனை பெரிய பதவியில் இருக்கும் எடப்பாடியை, ஆதவ் அர்ஜுனா விமர்சிக்க தகுதியே இல்லை. இதுவரை எடப்பாடி பழனிசாமி எத்தனை வலுவான விமர்சனங்களை முன் வைத்திருந்தாலும் யாரையும் இதுவரை தரக்குறைவாகவோ மரியாதை இல்லாமலோ விமர்சித்ததில்லை.

அவர் தனது விமர்சனத்தில் எப்போதுமே நாகரீகமான வார்த்தைகளையே பயன்படுத்தி வருகிறார். அவரது விமர்சனங்கள் உண்மையாக, நேர்மையாக கடினமாக இருக்கும். அதே சமயத்தில் நாகரீகமாகவும் இருக்கும்.

ஆதவ் அர்ஜுனாவுக்கு பொது வாழ்க்கையில் நல்ல இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் அவர் முதலில் நாகரீகத்தை கற்றுக் கொள்ள வேண்டும். அது போல் எடப்பாடி பழனிசாமியை விமர்சிக்கும் அளவுக்கு அவருக்கு எந்தவிதமான தகுதியும் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

பொது மேடையில் ஒரு தலைவரை பார்த்து நிறைய பேர் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்கிறார்கள். ஆனால் ஆதவ் அர்ஜுனாவை பார்த்து யாரும் இது போல் மரியாதை குறைவாக பேச கற்றுக் கொள்ள கூடாது. இதற்கெல்லாம் எடப்பாடி பழனிசாமி பதில் சொல்ல தேவையில்லை, நான் சொல்லிவிட்டேன், எங்கள் கட்சியினர் பதில் அளிப்பார்கள்.

பெரியவர்களை மதித்தல் என்பது கட்சிக்கு அப்பாற்பட்ட விஷயமாகும் என்றார். அதிமுக கூட்டணியில் தவெக உள்ளிட்ட கட்சிகள் இணைய வாய்ப்பிருக்கிறதா என செய்தியாளர்கள் கேள்விக்கு, கவுதமி, அது போக போகத்தான் தெரியும். சரியான நேரத்தில் சரியான முடிவை எடப்பாடியார் எடுப்பார். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal