சென்னை சிட்டிசன்ஸ் போரம் சார்பில் தி நகர் கிருஷ்ணகான சபாவில் நடைபெற்ற ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் ஏர் மார்ஷல் மாதேஸ்வரன் மற்றும் கர்னல் ஜான் பிரின்ஸ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்நிகழச்சியில் பா.ஜ.க.விலிருந்து விலகிய கே.டி.ராகவன் கலந்து கொண்டது பலரை முகம் சுழிக்க வைத்திருக்கிறது.
பஹல்காமில் இந்திய பெண்களின் தாலியையும், குங்குமப் பொட்டையும் அழிக்கும் விதமாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் வேட்டையாடினர். பாதிக்கப்பட்ட பெண்களுக்காக பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என பெயரிடப்பட்டது. மத்திய அரசு பெண்கள் மீது வைத்திருக்கும் பெரும் மரியாதையை இதிலிருந்தே புரிந்து கொள்ள முடிகிறது.
இந்த நிலையில்தன் ‘சிந்தூர் ஆபரேஷன்’ குறித்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் கே.டி.ராகவன் கலந்து கொண்டதுதான் பலரை முகம் சுழிக்க வைத்ததுடன், பா.ஜ.க.வினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
இது பற்றி தமிழக அரசியல் பார்வையாளர்கள் சிலரிடம் பேசினோம்.
‘‘சார், பெண்களை கடவுளாக நேசிக்கும் இந்திய மண்ணில், குறிப்பாக தமிழக மண்ணில் பிறந்த கே.டி.ராகவன் பூஜை அறையில் இருந்து கொண்டபடியே செய்த ‘பாலியல்’ விவகாரம்தான் தமிழகத்தையே பதற வைத்தது. அதன் பிறகு பா.ஜ.க.வில் இருந்து அவராகவே விலகினார். இந்த விவகாரம் தமிழக பா.ஜ.க.விற்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்திற்குப் பிறகு தமிழக அரசியல் களத்தில் இருந்து விலகியிருந்த கே.டி.ராகவன், அண்ணாமலையின் பதவி போன பிறகு மெல்ல மெல்ல லைம் லைட்டிற்கு வர ஆரம்பித்திருக்கிறார். பூஜை அறையில் இருந்துகொண்டே ‘சல்லாப’ காட்சிகள் வெளியான நிலையில், இப்படியொருவர் மீண்டும் கட்சிப் பணிகளில் களமிறங்குவது தமிழக பா.ஜ.க.விற்கு பெரும் பிண்ணடைவை ஏற்படுத்தும்.
கே.டிராகவனின் செயல்பாடுகள் இந்துமத உணர்வுகளை புண்படுத்துவதாக அமைந்திருப்பதாக பியூஷ மனுஷ் தமிழக காவல்துறை தலைவருக்கு அப்போது புகார் மனு அளித்திருந்தார். இந்த நிலையில்தான் கவர்னர் கலந்துகொள்ளும் மதிப்பு மிக்க நிகழச்சியில் கே.டி.ராகவன் கலந்துகொண்டது, இந்து மக்களின் மனங்களை புண்படுத்தியதாக தெரிகிறது.
தவிர, மத்திய அமைச்சர் ஒருவருக்கு கே.டி.ராகவன் தன்னை மிகவும் நெருக்கமானவராக காட்டிக்கொண்டு, பல்வேறு விவகாரங்களில் தலையிடுவதாகவும், கல்லா கட்டி கட்சி நிகழ்ச்சிகளை நடத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. பி.ஜே.பி. தலைமைதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.