‘டாஸ்மாக்’ நிறுவன பொதுமேலாளர் சங்கீதா, துணை பொது மேலாளர் ஜோதி சங்கர் ஆகியோருக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள், ‘சம்மன்’ அனுப்பி உள்ளனர்.
மதுபானங்களை கொள்முதல் செய்து விற்பனை செய்து வரும் டாஸ்மாக் நிறுவனத்தில் 1000 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்து இருப்பதாக, அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக சென்னை மணப்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் மற்றும் ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றி உள்ளது.
எந்தெந்த ஆலைகளில் இருந்து, அதிக மதுபானங்களை கொள்முதல் செய்ய வேண்டும்; ‘பார் டெண்டர்’ யாருக்கு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட விவகாரங்களில் துணை முதல்வர் உதயநிதியின் நெருங்கியநண்பர் ரத்தீஷ் முக்கிய பங்கு வகித்துள்ளார் என்பது அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர் வெளிநாட்டுக்கு தப்பிய நிலையில் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் மற்றும் ரத்தீஷ் இடையே நடந்த பணப்பரிமாற்றம் குறித்த விபரங்களை சேகரித்துள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை அண்ணா நகரில் வசித்து வரும் தனியார் வங்கி அதிகாரி ஒருவரிடமும் விசாரணை நடத்தி உள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் சிக்கிய ஆவணங்கள் தொடர்பாக விசாகனிடம் ஐந்து மணி நேரம் விசாரித்து வாக்குமூலம் பெற்றுள்ளனர். அதேபோல கொள்முதல் மற்றும் விற்பனை பிரிவு துணை பொது மேலாளர் ஜோதி சங்கரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து நிர்வாகம் மற்றும் மொத்த விற்பனை பிரிவு பொது மேலாளர் சங்கீதாவும், ஜோதி சங்கரும், இன்று காலை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்கத் துறை அதிகாரிகள் ‘சம்மன்’ அனுப்பி உள்ளனர்.
இதுதொடர்பாக அமலாக்கத் துறை வட்டாரத்தில், ‘‘டாஸ்மாக்கில் உதவி பொது மேலாளர், துணை பொது மேலாளர் என்ற நிலையில் ஜோதிசங்கர் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்துஉள்ளார். அவருக்கு ஊழல் நடந்த விதம் குறித்து தெரியும். அதுபோல மொத்த விற்பனை தொடர்பாக சங்கீதாவிடமும் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. அதன் அடிப்படையில் ஜோதிசங்கர், சங்கீதா ஆகியோர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு உள்ளனர்’’ என்றனர்.