‘‘பிரிவினைவாத அரசியலுக்கு முதல்வர் ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’’ தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

இது தொடர்பாக தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தமிழக அரசு மட்டுமல்ல, மத்திய அரசும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்பதை முதல்வர் ஸ்டாலின் உணர வேண்டும்.

மாநில சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பும் சட்ட மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு நிர்ணயம் செய்து கடந்த ஏப்ரல் 8ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது தொடர்பாக, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்கள், 14 கேள்விகளை எழுப்பி உச்ச நீதிமன்றத்திடம் விளக்கம் கேட்டிருக்கிறார்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்கம், கர்நாடகம், ஹிமாச்சல்பிரதேசம், தெலங்கானா, கேரளம், ஜார்கண்ட், பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர் ஆகிய 8 எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். குடியரசுத் தலைவரின் மரபு சார்ந்த நடைமுறையை அவமதிக்கும் வகையில், அரசியல் உள்நோக்கத்துடன் முதல்வர் ஸ்டாலின் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம் பிரிவினைவாத அரசியலின் வெளிப்பாடு மற்றும் இந்திய அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது.

அதில், “உச்ச நீதிமன்றத்திடம் கேள்விகள் கேட்டு குடியரசுத் தலைவர் அனுப்பியுள்ள குறிப்பினை நாம் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும். நீதிமன்றத்தின் முன் நாம் அனைவரும் ஒருங்கிணைந்த சட்ட உத்தியை உருவாக்கி, அரசியல் அடிப்படைக் கட்டமைப்பைப் பாதுகாக்க வழிவகுத்திட வேண்டும். இந்த முக்கியமான பிரச்சினையில் மேற்குறிப்பிட்டுள்ள மாநில முதல்வர்களின் உடனடியான தனிப்பட்ட தலையீட்டை எதிர்நோக்குகிறேன்: என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இது துரதிஷ்டவசமான, தவறான முன்னுதாரணம் ஆகும்.

மும்பையில் நேற்று பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், “ஜனநாயகத்தின் மூன்று தூண்களான நீதித்துறை, நாடாளுமன்றம், அரசு நிர்வாகம் ஆகியவை சமமானவை“ என குறிப்பிட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலினுக்கு இதைவிட சிறந்த பதில் இருக்க முடியாது.

தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை மீறி, நியமனம் செய்யப்பட்ட ஆளுநர் எப்படி செயல்படலாம் என, முதல்வர் ஸ்டாலின் கேட்கிறார். ஆளுநர் என்பவர் தனி நபர் அல்ல. அவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அரசின் பிரதிநிதி. எப்படி நியமனம் செய்யப்பட்ட தலைமைச் செயலரின் முடிவு, மாநில அரசின் முடிவாக இருக்கிறதோ, அதுபோல நியமனம் செய்யப்பட்ட ஆளுநரின் முடிவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அரசின் முடிவுதான்.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான 10 ஆண்டு கால, காங்கிரஸ் – திமுக கூட்டணி ஆட்சியில், ஆளுநரைக் கொண்ட குஜராத் மாநில அரசுக்கு கொடுத்த குடைச்சல்களை நேரடியாக அனுபவித்தவர் இன்றைய பிரதமர் நரேந்திர மோடி. எனவே, ஆளுநர்களைக் கொண்டு எந்த மாநில அரசுக்கு தொந்தரவு கொடுப்பதை பிரதமர் மோடி விரும்ப மாட்டார். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் கூட ஆளுநர்கள், முதல்வர்கள் இடையே மோதல் இல்லை. ஆனால், திமுக ஆளும் தமிழகத்தில் பிரச்னை வருகிறது என்றால் அதற்கு தி.மு.க., அரசின் அதிகார அத்துமீறலும், எதற்கெடுத்தாலும், மத்திய அரசுடன் மோதும் ஆணவப் போக்கும்தான் காரணம்.

திமுக அரசு மட்டுமல்ல, மத்திய அரசும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் என்பதை முதல்வர் ஸ்டாலின் உணர வேண்டும். அப்போதுதான் இப்பிரச்னைக்கு தீர்வு வரும். பாஜகவைப் பொறுத்தவரை அரசியலமைப்புச் சட்டத்தையும், உச்ச நீதிமன்றத்தையும் எல்லோரையும்விட அதிகமாக மதித்துச் செயல்படுகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் வழக்கம்போல, கடிதம் எழுதும் நாடகத்தை கைவிட்டு, மக்கள் நலனுக்காக மத்திய அரசுடன் இணைந்த செயல்பட வேண்டும்’’ இவ்வாறு அதில் கூறியிருக்கிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal