தமிழக டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அமலாக்கத் துறையின் விசாரணையில் இருந்து தப்பிய தொழிலதிபர் ரத்தீஷை, ‘யார் அந்த தம்பி?’ என கேள்வி கேட்டு, தி.மு.க.,வுக்கு எதிராக அடுத்த பிரசாரத்தை அ.தி.மு.க., துவக்கியுள்ளது.

சென்னை அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து, தி.மு.க., அனுதாபியாக இருந்த ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். மாணவியை அவர் மிரட்டும் போது, ‘சார்’ என குறிப்பிட்டு ஒருவருக்கு போன் செய்து பேசியதாக தகவல் வெளியானது.

இதை வைத்து, தி.மு.க.,வை மிகக் கடுமையாக விமர்சித்து, ‘யார் அந்த சார்?’ என கேள்வி எழுப்பி, தமிழகம் முழுதும் அ.தி.மு.க.,வினர் பல்வேறு வகையில் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்; இதே பிரச்னையை சட்டசபையிலும் எழுப்பி, தி.மு.க.,வுக்கு நெருக்கடி கொடுத்தனர்.

இந்நிலையில், டாஸ்மாக்கில் 1,000 கோடி ரூபாய் ஊழல் தொடர்பாக மேலாண் இயக்குநர் விசாகனிடம், அமலாக்கத் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அவரைத் தொடர்ந்து, தி.மு.க.,வுடன் தொடர்புடைய தொழிலதிபர் ரத்தீஷ் என்பவரையும் அமலாக்கத் துறையினர் தேடி வருகின்றனர்.

சென்னை, எம்.ஆர்.சி., நகரில் உள்ள அவருடைய வீட்டுக்குச் சென்ற அமலாக்கத் துறையினர், அவர் அங்கு இல்லாததால், வீட்டை பூட்டி ‘சீல்’ வைத்துள்ளனர்.

தற்போது இந்தப் பிரச்னையை, தி.மு.க.,வுக்கு எதிராக அ.தி.மு.க., கையில் எடுத்துள்ளது. தி.மு.க.,வின் மிக முக்கிய பிரமுகருக்கு நெருக்கமானவராக இருந்து ரத்தீஷ் செயல்பட்டவர் என்பதால், ‘யார் அந்த தம்பி?’ என்ற கேள்வியுடன், மக்களிடம் அ.தி.மு.க., பிரசாரம் செய்யத் துவங்கி உள்ளது.

இதுகுறித்து, அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்பப்பிரிவு செயலர் ராஜ்சத்யன் கூறியதாவது: ‘‘அண்ணா பல்கலையில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தி.மு.க., அனுதாபி ஞானசேகரனை வைத்து, ஏற்கனவே அ.தி.மு.க., சார்பில் ‘யார் அந்த சார்?’ என, போஸ்டர் பிரசாரம் செய்தோம்.

டிஜிட்டலாகவும் இந்த பிரசாரத்தை மேற்கொண்டோம். அதேபோல, இப்போது ரத்தீஷ் விவகாரத்தை கையில் எடுத்துள்ளோம். போஸ்டர் பிரசாரம் துவங்கியுள்ளது. டிஜிட்டல் பிரசாரமும் வேகமெடுக்கும்’’ இவ்வாறு அவர் கூறினார்.

“டாஸ்மாக் MD வீட்டின் அருகே கிழிந்த நிலையில் டாஸ்மாக் நிறுவனம் தொடர்பாக முக்கிய விவரங்கள் குறித்த வாட்சப் Chat Screenshots கிடைத்ததாகவும், இவை துணை முதல்வர் உதயநிதியின் நண்பர் ரத்தீஷிடம் பேசியது எனவும் செய்திகள் வருகின்றன. உதயநிதியுடன் டாஸ்மாக் MD எடுத்த புகைப்படத்தை அவருக்கே அனுப்பும் அளவிற்கு அதிகாரம் படைத்தவரா இவர்?

டாஸ்மாக்கில் வாங்க வேண்டிய மதுபானங்கள் பட்டியலை அதன் MD-க்கு அனுப்பும் அளவிற்கு அதிகாரம் படைத்த இந்த ரத்தீஷ் தான் திமுகவின் புதிய Power Center-ஆ? இவர் துணை முதல்வருக்கு இணை முதல்வராக இருப்பதனாலோ என்னவோ, அனைத்து அதிகாரிகளும் பணிந்தார்களா? So, Sketch உதயநிதிக்கா? #யார்இந்ததியாகி?” என அ.தி.மு.க கேள்வியெழுப்பியது.

இந்த நிலையில் அ.தி.மு.க தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “2-வது நாளாக தொடரும் ED ரெய்டுகள்! இன்னும் இந்த ரெய்டுகள் பற்றி முதல்வர் ஸ்டாலின் மவுனமாக இருப்பது ஏன்? தன் குடும்பத்தைச் சார்ந்தவர் வீட்டிலும், தனக்கு நெருக்கமானவர் வீட்டிலும் நடக்கும் இந்த ரெய்டு பற்றி ஏன் பேச மறுக்கிறார்?

ரத்தீஷ் எங்கே இருக்கிறார்? துபாய் சென்றுவிட்டதாக வரும் செய்திகள் உண்மையா? அப்படியென்றால், ரெய்டு வருமோ என்ற அச்சத்தில் தலைமறைவானாரா ரத்தீஷ்? முதல்வராலும், அவரது மகனாலும் “தம்பி” என்று அன்போடு அழைக்கப்படும் ரத்தீஷின் “Job Description” என்ன? #யார்அந்த_SIR என்று கேட்டோம் பதில் வரவில்லை. #யார்அந்த_தியாகி என்று கேட்டோம்… தமிழ்நாட்டிற்கே தெரிந்த பதில் என்றாலும் ஸ்டாலின் வாய் திறக்கவில்லை.

இப்போது கேட்கிறோம் #யார்அந்ததம்பி? எப்படி வந்தது இந்த தம்பிக்கு இவ்வளவு அதிகாரம்? இந்த தம்பி கைதாகும் போது, தம்பியின் வசம் உள்ள தி.மு.க-வின் குடுமி சிக்கும்! அப்போது பேசித் தானே ஆக வேண்டும் ஸ்டாலின், உதயநிதி.” என்று பதிவிட்டிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal