‘என்னை அடையாளம் காட்டியது அம்மாவும், எம்.ஜி.ஆரும்தான். உயிருள்ள வரை அ.தி.மு.க.வில்தான் இருப்பேன். பதவிக்காக யார் கதவையும் தட்டியது கிடையாது’ என்று பேசிய ஜெயக்குமார், எடப்பாடி பழனிசாமியின் பெயரை உச்சரிக்கக்காததுதான் அ.தி.மு.க.வில் மீண்டும் சலசலப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த 2024 இதே ஏப்ரல் மாதம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘‘2019 மற்றும் 2021 ஆகிய தேர்தல்களில் பாஜக கூட்டணியால் அதிமுகவிற்கு சிறுபான்மையின மக்கள் வாக்களிக்கவில்லை. அதுமட்டுமின்றி நாங்கள் தோல்வி அடைந்ததற்கும் பாஜக தான் காரணம். ஆனால் 2024 மக்களவை தேர்தலில் அவர்களின் 10 சதவீத வாக்குகள் நிச்சயம் எங்களுக்கு கிடைக்கும். ஏனெனில் பாஜக உடன் நாங்கள் கூட்டணி வைக்கவில்லை. ராயபுரம் தொகுதியில் நான் தோற்க வேண்டிய ஆளே இல்லை. ஆதிதிராவிட மக்கள், மீனவர்கள், சிறுபான்மையின மக்கள் உள்ளிட்டோருக்கு பாஜகவை பிடிக்கவில்லை’’ என்று கூறினார்.

இந்த நிலையில்தான், சமீபத்தில் சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடன் கைகோர்த்து நின்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சைலண்ட் மூடில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பாஜக உடனான கூட்டணியை உறுதி செய்துள்ளார். இதன் தொடர்ச்சியாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை செய்தியாளர்கள் சந்திப்பில் எங்கும் காணவில்லை. இந்நிலையில் அதிமுக& – பாஜக கூட்டணியால் ஜெயக்குமார் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்று கேள்விகள் எழுந்தன.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக காய் நகர்த்த திட்டமிட்டுள்ளார். மீண்டும் ஒரு உட்கட்சி பூசல் வெடிக்கப் போகிறது. அதிமுகவில் இருந்து விலகலாம். மேலும் அதிருப்தியாளர்கள் உடன் சேர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இணையலாம் என்றெல்லாம் கூறத் தொடங்கினர். தி.மு.க.வும் ஜெயக்குமாருக்கு ‘வலை’ விரிக்கத் தொடங்கியிருக்கிறது என்றெல்லாம் தகவல்கள் வெளியானது.

இதற்கிடையில் தமிழ் புத்தாண்டு தினம் இன்று (ஏப்ரல் 14) கொண்டாடப்படும் நிலையில் ஜெயக்குமார் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் ஜெயலலிதா முன்னிலையில் 2012ல் நடந்த தமிழ் புத்தாண்டு தின விழா வீடியோவை நேற்று பகிர்ந்திருந்தார். அப்போது அவருடன் ஓபிஎஸ் அவர்களும் அமர்ந்திருக்கிறார். இன்று பகிர்ந்த பதிவும் அது சார்ந்தே இருந்தது. இவை எவற்றிலும் எடப்பாடி பழனிசாமி இல்லை. எனவே இதை வைத்தும் ஜெயக்குமாரின் அரசியல் நகர்வு என்றெல்லாம் பேசத் தொடங்கினர்

பாஜக உடன் அதிமுக கூட்டணி வைத்தால் கட்சியில் இருந்து ஜெயக்குமார் விலகுவதாக திருமாவளவன் உள்ளிட்ட பலர் கூறி வருகின்றனர். இந்த நிலையில்தான் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், ‘‘கடந்த நான்கு நாட்களாக இதுதொடர்பான மீம்ஸ்கள், ட்ரோல்கள், கார்டுகள் என சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. ஆனால் ஒரு பொய்யான கார்டு. திட்டமிட்டு பரப்பப்படும் பொய் செய்தி. இந்த யூ-டியூப் சேனல்களுக்கு என்னால் வருமானம் கிடைத்தது என்பதில் மிக்க மகிழ்ச்சி.

எங்களின் குடும்பம் நீண்ட நெடிய திராவிட பாரம்பரியம் கொண்டது. தன்மானத்துடன் இருக்கக் கூடியவர்கள். அதிமுக எங்களை அடையாளம் காட்டியது. என்னை அடையாளம் காட்டியது எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தான். இவர்கள் வழியில் எங்களின் பயணம் தொடரும். எனவே பொய் செய்திகளை பரப்பி அற்ப சந்தோஷம் தேட வேண்டும். பதவிக்காக ஜெயக்குமார் யாரிடமும் நின்றதில்லை. என் உயிர்மூச்சு இருக்கும் வரை அதிமுகவில் தான் இருப்பேன்’’ என்று கூறியவர் ஒரு இடத்தில் கூட எடப்பாடி பழனிசாமியின் பெயரை உச்சரிக்கவில்லை என்பதுதான் அ.தி.மு.க.வில் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும் என்பதுதான் தலைநகரின் கேள்வியாக இருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal