அமைச்சர் கே.என்.நேரு வீடு, அலுவலகங்கள் மற்றும் அவரது சகோதரர்கள் வீடுகளில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறை ரெய்டுகள் மூலம் சிக்கிய முக்கிய ஆவணங்களால், அமைச்சர் கே.என்.நேருவுக்கு வரும் நாட்களில் நெருக்கடி அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
சென்னை, கோவை உள்ளிட்ட பல இடங்களில் செயல்படும் கட்டுமான நிறுவனம், அதன் ஊழியர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அந்நிறுவனத்தின் இயக்குநரும், அமைச்சர் கே.என்.நேரு மகனும், பெரம்பலூர் தி.மு.க., எம்.பி.,யுமான அருண் நேரு வீட்டிலும் சோதனை நடைபெற்றது.
திருச்சி தில்லை நகரில் உளள அமைச்சர் கே.என்.நேருவின் வீட்டிலும் அமலாக்கத் துறையினர் பலமணி நேரம் சோதனை நடத்தினர். நேருவின் குடும்பத்தினர் காற்றாலை மின் உற்பத்தியிலும் ஈடுபட்டுள்ளனர். இந் நிலையில் அமலாக்கத்துறை எக்ஸ் வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. அதில், சோதனையின் போது என்ன கைப்பற்றப்பட்டது என்பதை குறிப்பிட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு; ‘‘சென்னை, திருச்சி மற்றும் கோயமுத்தூர் ஆகிய இடங்களில் 2002ம் ஆண்டின் PMLA பணபரிமாற்ற சட்டத்தின் படி M/s Truedom EPC India Pvt Ltd மற்றும் அதன் முக்கிய பணியாளர்களுடன் தொடர்புடைய 15 இடங்களில் ஏப்.7ம் தேதி சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டது.சோதனை நடவடிக்கைகளின் போது, பல்வேறு குற்றவியல் ஆவணங்கள், டிஜிட்டல் பதிவுகள் மற்றும் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன’’ இவ்வாறு அந்த பதிவில் அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது.
அமலாக்கத்துறை பதிவில், எந்த அரசியல்வாதியின் பெயரும் குறிப்பிடப்படவில்லை. மாறாக, சோதனை என்று நடைபெற்றது, எந்த நிறுவனத்தில் நடைபெற்றது என்று அதன் பெயரையும் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.
தவிர, அமலாக்கத்துறை கைப்பற்றிய ஆவணங்களின் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்தியிருக்கிறது. இதனால், அமைச்சர் கே.என்.நேருவுக்கு சிக்கல்கள் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.