ஆடிட்டிர் குருமூர்த்தி சந்திப்பிற்கு பின்னர் மத்திய அமைச்சர் அமித் ஷா செய்தியாளர்கள் சந்திப்பிற்காக வைக்கப்பட்டிருந்த பேனர் மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்றிரவு தமிழகம் வந்தார். இந்த பயணத்தின் போது, தேர்தல் கூட்டணி மற்றும் பா.ஜ.க, மாநில தலைவர் தேர்வு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து முக்கிய முடிவுகளை எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியது.
பா.ஜ.க, நிர்வாகி தமிழிசையின் தந்தை மறைவுக்கு ஆறுதல் கூறிய அமித்ஷா, ஆடிட்டர் குருமூர்த்தியின் வீட்டில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். சுமார் 2 மணிநேரம் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பா.ஜ.க, மாநில தலைவர் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோரின் செய்தியாளர்கள் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த சந்திப்பின் போது, பின்புறம் வைக்கப்பட்டிருந்த பேனரில் செய்யப்பட்ட திடீர் மாற்றம் தற்போது பேசு பொருளாகியுள்ளது.
குருமூர்த்தியுடனான சந்திப்புக்கு முன்பு, ‘என்.டி.ஏ., கூட்டணி’ என்ற பேனர் வைக்கப்பட்டிருந்தது. இதனால், 2026 சட்டசபை தேர்தலுக்கான பா.ஜ.க, தலைமையிலான என்.டி.ஏ., கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளின் தலைவர்களும் அமித் ஷாவுடன் செய்தியாளர்களை சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், குருமூர்த்தியுடனான சந்திப்புக்கு பிறகு, ‘பா.ஜ., தமிழகம், மத்திய அமைச்சர் அமித் ஷாவின் செய்தியாளர்கள் சந்திப்பு’ என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், பேனரில் நயினார் நாகேந்திரனின் போட்டோவும் இடம்பெற்றிருந்தது. இது தற்போது பேசுபொருளாகியுள்ளது.
தவிர, ஆடிட்டரின் சந்திப்பிற்குப் பிறகு, தமிழக பா.ஜ.க. தலைவர்கள் அனைவரையும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என அமித் ஷா கடிந்துகொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.