பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசிய அமைச்சர் பொன்முடியின் கட்சிப் பதவி பறிக்கப்பட்ட நிலையில், துரைமுருகன் தனது சர்ச்சைப் பேச்சிற்கு நிபந்தனையற்ற மன்னிப்புப் கோரியிருக்கிறார். இதனால், துரைமுருகனின் பதவி தப்பியிருக்கிறது என்கிறார்கள்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்ட கோவில்பட்டி அருகே இளையரசனேந்தலில் திமுக சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், தமிழ்நாட்டில் திமுகவும், அதிமுகவும் தான் கட்சிகள். மற்றவைகள் கட்சிகள் இல்லை. வரும் தேர்தலில் அதிமுகவும், பாஜகவும் இணைவார்கள்.

நொண்டி, கூன், குருடு போன்றவர்களை சேர்த்து கொண்டு திமுகவை எதிர்க்க பார்க்கிறார்கள் என்று தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகள் என்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயர் கொடுத்தார். அப்போது முதல் ஊனமுற்றோர் உள்ளிட்ட பெயர்களை விடுத்து, தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் மாற்றுத்திறனாளிகள் என்றே அழைத்து வருகின்றனர்.

ஆனால் திமுகவின் மூத்த தலைவரும், அமைச்சருமான துரைமுருகன், மாற்றுத்திறனாளிகளின் குறைபாடுகளை வைத்து எதிர்க்கட்சிகளை விமர்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் சார்பாக அமைச்சர் துரைமுருகன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இன்று காலை அமைச்சர் பொன்முடி பெண்கள் மற்றும் மதங்களை வைத்து பேசிய வார்த்தைகள் சர்ச்சையாகியது. இதனைத் தொடர்ந்து முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், பொன்முடி வகித்து வந்த துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்தார். இது திமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த அறிக்கை வெளியான சில நிமிடங்களிலேயே அமைச்சர் துரைமுருகன் மாற்றுத்திறனாளிகள் குறித்த தனது பேச்சிற்கு நிபந்தனையற்ற வருத்தம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இயற்கையிலேயே உடலில் ஏற்பட்ட குறைபாடு உடையவர்களை அருவறுக்கும் பெயர் கொண்டு, அவர்களை அழைத்து வந்ததை முன்னாள் முதல்வர் கருணாநிதி கருணை உள்ளத்தோடு ‘மாற்றுத் திறனாளிகள்’ என்று பெயரிட்டு அழைத்தார்.

அதையே நாங்களும் பின்பற்றி வருகிறோம். அப்படிப்பட்ட நானே, ஒரு பொதுக்கூட்டத்தில் பேச்சின் வேகத்தில் மாற்றுத் திறனாளிகளை பழைய பெயரையே கொண்டு உச்சரித்துவிட்டேன் என்று முதல்வர் ஸ்டாலின் என் கவனத்திற்கு கொண்டு வந்தபோது, நான் அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன். கருணாநிதியால் வளர்க்கப்பட்ட நானே இப்படிப்பட்ட தவறை செய்தது மிகப் பெரிய தவறாகும்.

மாற்றுத் திறனாளிகள் உள்ளம் புண்பட்டிருக்கும். அதற்காக என் நிபந்தனையற்ற வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். முதல்வர் ஸ்டாலின், எந்தளவிற்கு வருந்தியிருப்பார் என்பது எனக்குத் தெரியும். அவருக்கும் என் வருத்தத்தை தெரிவித்து, இனி இத்தகைய நிகழ்வு நிகழாது என்று உறுதி அளிக்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal