தற்போதைக்கு தி.மு.க. கூட்டணியில் திருமாவளவன் இருந்தாலும், தேர்தல் நெருங்கும் சமயத்தில் த.வெ.க.வுக்கு செல்ல வாய்ப்பிருக்கிறது என்று கூறிவந்த நிலையில், வக்பு திருத்தச் சட்ட மசோதாவுக்கு எதிராக வாக்களித்த அதிமுகவுக்கு விசிக தலைவர் திருமாவளவன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: நாடாளுமன்ற வரலாற்றில் களங்கம் என்று சொல்லக் கூடிய வகையில், வக்பு திருத்தச் சட்ட மசோதாவை நிறைவேற்றியிருக்கின்றனர். ஒரு அநீதியை அரங்கேற்றியிருக்கின்றனர். வக்பு திருத்தச் சட்ட மசோதாவை அதிமுக உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்திருப்பது பாராட்டுக்குரியது.

அடுத்த கூட்டத் தொடரில் இன்னும் என்னவெல்லாம் செய்யப் போகிறார்கள், எந்த சட்டத்தைக் கொண்டு வரப்போகிறார்கள் என்று அச்சம் நிலவு கிறது. இந்தியப் பொருட்கள் மீது அமெரிக்கா 26 சதவீதம் வரி விதித்துள்ளது. இந்த வரி விதிப்பை இதுவரை பிரதமர் மோடி கண்டிக்கவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. இதைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம்.

அமெரிக்கா அதிபரின் நடவடிக்கை இந்திய வர்த்தகத்தை கடுமையாக பாதிக்கும். குஜராத் வன்முறையை வெளிப்படுத்தும் வகையில் எம்புரான் திரைப்படம் வெளியாகியிருக்கிறது. கடுமையான சென்சார் துண்டிப்புக்குப் பிறகு வெளியான நிலையிலும், தயாரிப்பு நிறுவனத்துக்கு எதிராக மத்திய பாஜக அரசு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது கண்டனத்துக்குரியது’’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அ.தி.மு.க.வை திருமாவளவன் பாராட்டியிருப்பதுதான் 2026 கூட்டணி களம் மாறுகிறதா? என அரசியல் பார்வையாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal