சனிப்பெயர்ச்சி வரும் 29-ந் தேதி நிகழும் என்கிற தகவல்கள் வெளியாகி இருந்தன; ஆனால் மார்ச் 29-ந் தேதி சனிப்பெயர்ச்சி நிகழாது என புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் பாரம்பரிய கணிப்பு முறைப்படி 2026-ம் ஆண்டுதான் சனிப்பெயர்ச்சி நிகழும் என்றும் திருநள்ளாறு கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘பாரம்பரிய கணிப்பு முறைப்படி நடப்பு 2025-ம் ஆண்டு மார்ச் 29-ந் தேதி சனிப்பெயர்ச்சி நிகழாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். அதேநேரத்தில் வரும் 29-ந் தேதி திருநள்ளாறு கோவிலில் வழக்கமான பூஜைகள் மட்டுமே நடைபெறும். சனிப்பெயர்ச்சியானது 2026-ம் ஆண்டுதான் நிகழும். இது தொடர்பான தேதி பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
ஆன்மீக அன்பர்கள், சனிப்பெயர்ச்சி, குருபெயர்ச்சி உள்ளிட்டவைகளை மிகவும் எதிர்பார்த்திருப்பர். இத்தகைய நிகழ்வின் மூலம் தங்களது வாழ்வில் முன்னேற்றம், மாற்றங்கள் நிகழுமா என்கிற எதிர்பார்ப்பு நிலவும். இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சி வரும் 29-ந் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் எந்தெந்த ராசி, நட்சத்திரங்களுக்கு எப்படியான பலன்கள் கிடைக்கும் என்பதை ஜோதிடர்கள் விலாவாரியாக விவரித்தும் வருகின்றனர். இன்னொரு பக்கம், நடப்பாண்டு மார்ச் 29-ந் தேதி சனிப்பெயர்ச்சி இருக்குமா? இல்லையா? என்கிற குழப்பமும் இருந்து வந்தது.
இந்த நிலையில் சனீஸ்வர பகவானுக்கான பிரத்யேகமான கோவில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் நிர்வாகம் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
திருநள்ளாறு கோவில் நிர்வாகம் வெளியிட்ட இந்த அறிக்கையில், ‘‘சனீஸ்வர பகவான் கோவிலில் வாக்கிய பஞ்சாங்க முறைப்படிதான் பின்பற்றப்படுகிறது. இந்த மரபுப்படி தற்போதைய மார்ச் 29-ந் தேதி சனிப்பெயர்ச்சி நிகழாது; அடுத்த ஆண்டுதான் சனிப்பெயர்ச்சி நிகழும். அடுத்த ஆண்டு சனிப்பெயர்ச்சி எப்போது நிகழும் என்பது பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்; அதேநேரத்தில் வரும் 29-ந் தேதி திருநள்ளாறு கோவிலில் வழக்கமான பூஜைகள் நடைபெறும்’’ என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.