நீர்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் சட்டசபையில் நடந்தது. அப்போது அமைச்சர் துரைமுருகன் மற்றும் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., இடையே காரசார விவாதம் நடந்தது.
சட்டசபையில் இன்று (மார்ச் 24) நீர்வளத்துறை, இயற்கை வளங்கள் துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெற்று வருகிறது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலளித்தார்.
அ.தி.மு.க., பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, ‘‘அண்டை மாநில முதல்வர்கள் அனைவரும் நெருக்கமாக இருக்கிறார்களே, நீங்கள் தண்ணீர் பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கலாமா?’’ என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த துரைமுருகன், ‘‘பல ஆண்டுகளாக நடந்த பேச்சுவார்த்தை பலன் அளிக்கவில்லை. பேச்சு வார்த்தை நடத்தினால் அத்தனை விவகாரங்களும் கெட்டுப்போகும். இனி பேசினால் பயன் இல்லை என்று முடிவெடுத்து உச்சநீதிமன்றத்திற்கு போய் இருக்கிறோம்.
உச்சநீதிமன்றம் தான் நமது உரிமைக்கு அளித்து சலுகை செய்து இருக்கிறது. இன்றைக்கு ஒவ்வொரு விஷயத்திற்கு உச்சநீதிமன்றத்திற்கு போய் இருக்கிறோம். இருவரும் பேச ஆரம்பித்தால் நீங்களே பேசி தீர்த்துக்கொள்ளுங்கள் என்று நீதிமன்றம் கூறிவிடும். மார்க்கண்டேய நதியில் அணை கட்டுவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்திற்கு போய் இருக்கிறோம்.
வி.பி.சிங் ஆட்சிக்காலத்தின் போது, பேசிப்பாருங்கள் என கருணாநிதியிடம் அவர் தெரிவித்தார்.இனி பேச முடியாது என கருணாநிதி கூறியதால்தான், காவிரி தீர்ப்பாயம் நமக்கு கிடைத்தது. அண்டை மாநிலங்களில் ஏராளமான தமிழர்கள் வாழ்வதால் பேச்சில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என நினைத்தேன்.
மேகதாது அணைக்கு விரிவான திட்ட அறிக்கையை அவர்கள் தயார் செய்தனர். அதனை காவிரி ஆணையத்திலும் விவாதத்திற்கு முன்வைத்தனர். ஆனால், காவிரி ஆணையத்திற்கு மேகதாது குறித்துப் பேச உரிமை இல்லை என்று நாம் கூறியதால்தான், அந்த விவாதம் கைவிடப்பட்டு திட்ட அறிக்கை திரும்ப அனுப்பப்பட்டது. தமிழகத்தின் அனுமதி இல்லாமல் காவிரியில் எந்த அணையும் கட்ட முடியாது.
முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகமும் கேரளாவும் வழக்கு தொடர்ந்ததாகவும், 14 முறை 142 அடி உயரம் வரை தண்ணீர் தேக்கப்பட்டது. அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை நீங்கள் தொடங்கினீர்கள் என்கிறீர்கள். ஆனால், அதை கிடப்பில் போட எங்கள் தலைவர் விரும்பவில்லை. நிதி ஒதுக்கி அதை முடித்தோம். ஆனால், தாமிரபரணி-&கருமேனி ஆற்றுத் திட்டத்தை நீங்கள் 10 ஆண்டுகள் கிடப்பில் போட்டீர்கள். நாங்கள் வந்து அதை முடித்தோம்,
நாங்கள் மாற்றான் தாய் மனதுடன் செயல்படவில்லை. நீங்கள் தான் அப்படி செய்தீர்கள். காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு உள்ளிட்ட பிரச்னைகளுக்காக உச்சநீதிமன்றத்தில் 22 வழக்குகளை தொடர்ந்துள்ளோம். இதன் மூலம் தமிழக உரிமைகளை பாதுகாக்க போராடி வருகிறோம்’’ இவ்வாறு துரைமுருகன் பதில் அளித்து பேசினார்.