தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு துறை அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக சட்டசபையில் பேசினார்.

முதல்வர் ஸ்டாலின் சட்டப் பேரவையில் பேசுகையில், ‘‘தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டம் தொடர்பாகத் தெரிவிக்க விரும்புகிறேன். மக்கள் நல்வாழ்வு திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தியதற்காகத் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது என்பதற்காகச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தற்போது இருக்கும் தொகுதி மறுவரையறை மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் எனப் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் அறிவிக்க வேண்டும். வட மாநிலங்களில் எந்த விகிதத்தில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படுகிறதோ அதே விகிதத்தில் தமிழ்நாட்டிலும் செயல்படுத்த வேண்டும். தமிழ்நாடு முன்னெடுத்துச் செல்கின்ற தொகுதி மறுவரையறை விழிப்புணர்வு குறித்து தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் மக்களின் சார்பாக இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நியாயமான தொகுதி மறுவரையறையை பெற்றிட தமிழ்நாடு எம்.பி.க்கள் பிரதமரை சந்திக்க இருக்கின்றனர்’’ எனத் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal