‘‘தமிழகத்தில் பா.ஜ.க, ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொரு அரசு பள்ளிகளையும் மேம்படுத்தி பிஎம்ஸ்ரீ பள்ளிகளாக மாற்றுவோம்’’ என தமிழக பா.ஜ.க, தலைவர் அண்ணாமலை கூறினார்.

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது: ‘‘தி.மு.க., மேடையில் ஆபாச பேச்சுகள் மட்டும் தான் இருக்கின்றன. அவர்கள் பேசுவது எல்லாம் ஆபாச பேச்சுகள். அதற்கு கைதட்ட 100 பேர். கைதட்டுவதால், நாம் சரியான பாதையில் போகிறோம் என்ற மாய உலகத்தில் முதல்வர் அமர்ந்துள்ளார். 2026 சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற மாய உலகில் உள்ளார். அங்கு இருக்கும் தொண்டர்கள், ஆபாச பேச்சுக்கு கைதட்டுவதே காரணம்.

வட மாநிலத்தவர்களை அமைச்சர்கள் விமர்சித்து பேசுகின்றனர். இதற்கு கைதட்டுகின்றனர். இவர்கள் யாரும் கும்மிடிபூண்டியை தாண்டி இந்தியா எப்படி இருக்கிறது என பார்த்தது கிடையாது. இவர்கள் 1967 ல் மாய உலகில் மாட்டி உள்ளனர். தமிழகத்தை தாண்டி பாரதம் முழுவதும் சென்றால் நாட்டின் வளர்ச்சி பற்றி தெரியும். வட மாநிலங்களில் இருப்பவர்கள் யாரும், நம்மை இழிவாக பேசியது இல்லை. எந்த அரசியல்வாதியும் தமிழ் சமுதாயத்தை பற்றி தவறாக பேசவில்லை. ஆனால், தி.மு.க., தலைவர்கள் மட்டும் ஒவ்வொரு மாநிலத்தை பற்றி தவறாக பேசுகின்றனர்.

இதற்கு தி.மு.க.,வினருக்கு பயம். வெளியே மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்ற பயம். அவர்கள், குடும்பத்தினர் மட்டும் ஆட்சியில் உள்ளதால், மக்களின் மனநிலை தெரியாமல் ஆட்சியில் அமர்ந்துள்ளனர். மக்களுடன் பழகினால் தான் மக்கள் என்ன நினைப்பார்கள் என தெரியும். ஆனால், அண்ணாதுரைக்கு பிறகு, தி.மு.க.,வினர் கூண்டுக்கிளியாக அமர்ந்துள்ளனர். அவர்களுக்கு வெளியே வந்து மக்கள் என்ன நினைக்கின்றனர் என தெரியாது.

சுதந்திரத்திற்கு பிறகு 2 கல்விக் கொள்கை தான் இருந்தது. தேசிய கல்விக் கொள்கையில் 1 முதல் 5ம் வகுப்பு வரை கட்டாயமாக தமிழ் மொழி தான் கற்றல் மொழியாக இருக்க வேண்டும் என கொண்டு வந்தார். இதனை தி.மு.க.,க்காரன் சொல்ல மாட்டான். இத்தனை ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அவர்கள் இதைக் கொண்டு வரவில்லை. ஆனால் பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார். 6,7,8ம் வகுப்புகளில் தாய்மொழியில் கற்றுக் கொடுக்க முயற்சி எடுப்போம்.

தி.மு.க., காங்கிரசுடன் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த போது, 3வது கட்டாய மொழி ஹிந்தி தான் இருந்தது. முதல்முறையாக மும்மொழி கொள்கையில், விருப்பமான மொழியை 3வது மொழியாக படியுங்கள் என கூறப்பட்டு உள்ளது.

கையெழுத்து இயக்கம் ஆரம்பித்து 28 நாளில் 26 லட்சம் பேர் கையெழுத்து போட்டு உள்ளனர்.நீட் தேர்வுக்கு எதிராக, கவர்னருக்கு எதிராக திமுக., ஆரம்பித்த கையெழுத்து இயக்கத்தில் எத்தனை பேர் கையெழுத்து போட்டு உள்ளனர் என தெரியாது.பா.ஜ.,வின் கையெழுத்து இயக்கத்தில் இணையதளத்தில் 8,20,336 பேர் கையெழுத்து போட்டு உள்ளனர். நேரடியாக 17,89,694 பேர் கையெழுத்து போட்டு உள்ளனர். நேற்று மாலை வரை 26,10,033 பேர் கையெழுத்து போட்டு உள்ளனர்.இது தமிழகத்தில் அரசியல் புரட்சி. இதே வேகத்தில் போனால், 2 கோடி கையெழுத்தை நோக்கி போயிருப்போம். இன்னும் 74 லட்சம் கையெழுத்து தேவைப்படுகிறது. 8 வது மாநாடு நடக்கும் போது நமது இலக்கான ஒரு கோடியை தாண்டி இரண்டு கோடியை நோக்கி சென்றிருப்போம்.

தி.மு.க.,வில் யாரும் படித்து அதிகாரத்திற்கு வரவில்லை. உதயநிதி பட்டம் வாங்கியது தெரியாது எங்கு படித்தார் தெரியாது. கல்வி அமைச்சர் அகில உலக உதயநிதி ரசிகர் மன்றத்தின் தலைவராக உள்ளார்.இவர் ஸ்டாலின் பின்னால் செல்வார். இதற்கு பிறகு நேரம் இருந்தால் கல்வியை பார்ப்பார்.இவர்களுக்கு கல்வியை பற்றி என்ன தெரியும். பல வழக்குகளில் சிக்கிய தி.மு.க., அமைச்சர்கள் ஒன்று சேர்ந்து நம் குழந்தைகள் என்ன படிக்கப் போகின்றனர் என முடிவு செய்யப் போகின்றனர்.

அரசு பள்ளிகளில் புதிய கல்விக் கொள்கை வரும்போது உலகத் தரம் வாய்ந்த குழந்தைகள் தயார்படுத்த முடியும்.அரசு பள்ளிகளில் புதிய கல்விக் கொள்கை வந்தால் உலகத் தரம் வாய்ந்த கல்வி கிடைக்கும். அரசு பள்ளியில் படித்தாலும், தனியார் பள்ளியில் படித்தாலும் சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்பது தான் தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படை நோக்கம். ஆனால், தி.மு.க.,வினர் நடத்தும் பள்ளியில் ஒரு கல்வி, அரசு பள்ளியில் தரமில்லாத கல்வி கொடுத்து தி.மு.க., தலைவர்களுக்கு போஸ்டர் ஒட்டுவதற்காக அரசு பள்ளி மாணவர்களை தயார்படுத்துகின்றனர்.

அனைத்து தனியார் , சிபிஎஸ்இ பள்ளிகளில் மூன்று மொழிகள் படிக்கின்றனர். அரசு பள்ளி மாணவர்கள் மட்டும் இரண்டு மொழிகள் படிக்கின்றனர். தமிழகம் வளராமல் இருப்பதற்கு அடிப்படை காரணம், இங்கிருப்பவர்கள் பேசுவது வேறு யாருக்கும் புரியாது.

வேலையில்லாத முதல்வர் கூட்டம் போடுகிறார் என வேலையில்லாத 3 முதல்வர்கள் விமானம் பிடித்து வருகின்றனர். தே.ஜ., கூட்டணி வரும் போது அரசு, தனியார் பள்ளிகளில் சம கல்வி வரும். அரசு பள்ளியை மேம்படுத்தி ஒவ்வொரு பள்ளியையும் பிஎம்ஸ்ரீ பள்ளியாக மாற்றுவோம்’’ இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal