மறைந்த முதல்வர் கலைஞரின் மனசாட்சியாகவும், டெல்லி தி.மு.க.வின் முகமாக விளங்கியவர் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலிமாறன்!

‘‘டெல்லியில் கழகத்துக்கும், உலக அரங்கில் இந்தியாவுக்கும் பெருமை தேடித் தந்த பண்பின் திருவுருவம் மதிப்புக்குரிய முரசொலி மாறன் அவர்களின் நினைவுநாள்!
தலைவர் கலைஞர் மீது கொண்ட தூய அன்பு – ஒப்பிலா அறிவுக்கூர்மை – மாறாக் கொள்கை என எடுத்துக்காட்டாக வாழ்ந்து நிறைந்த அவரது பணிகளை நன்றியுடன் இந்நாளில் போற்றுகிறேன்’’ என முதல்வர் ஸ்டாலின் முரசொலி மாறனின் நினைவுநாளன்று போட்ட பதிவுதான் இது! இதெல்லாம் கடந்தகாலம்!
நிகழ்காலத்திற்கு வருவோம்… தற்போது மத்தியில் ஆளும் கட்சி… மாநிலத்தில் ஆளக்கூடிய கட்சிகளை எப்படி உடைத்து உள்ளே நுழையலாம் என கணக்குப் போட்டு வருகிறது. அப்படி பலமாநிலங்களில் உள்ள மிகப்பெரிய கட்சிகளை உடைத்துப் போட்டது டெல்லி! அதில் தமிழகமும் விதிவிலக்கல்ல.
எம்.ஜி.ஆரும் உருவாக்கி ஜெயலலிதா கட்டிக்காத்து வந்த இயக்கத்தை (இன்றைக்கு ஒட்ட வைக்க நினைப்பது சுயலாபத்திற்கு) உடைத்தது மேலிடம்! இந்த நிலையில்தான் கடந்த காலங்களில் டெல்லியின் முகமாக டி.ஆர்.பாலு இருந்தார். தற்போது, தி.மு.க.விற்கு மிகவும் ஒரு நம்பிக்கைக்குரியவர் டெல்லியின் முகமாக இருக்க வேண்டும் என தி.மு.க. தலைமை கருதுகிறது.
அந்த வகையில் முரசொலி மாறனுக்குப் பிறகு டெல்லியின் முகமாக முதல்வரின் மருமகனும், உதயநிதியின் மைத்துனருமான சபரீசன் ஆக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்! இது பற்றி அறிவாலய வட்டாரத்திலும், டெல்லி தி.மு.க. வட்டாரத்திலும் சிலரிடம் பேசினோம்.
‘‘சார், தமிழகத்தில் தி.மு.க.வைப் பொறுத்தளவில் ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதி என்றாகிவிட்டது. தமிழக அரசியல் களத்தை உதயநிதி பார்த்துக்கொள்கிறார். அதே சமயம் டெல்லியின் அரசியல் களத்தை மிகவும் நம்பிக்கைக்குரிய, தனக்கு மனசாட்சியாக விளங்கக்கூடியவரிடம் ஒப்படைக்க வேண்டும் என முதல்வர் நினைக்கிறார். இதனை உதயநிதியும் விரும்புகிறார். இதற்கு காரணம் இருக்கிறது. மத்தியில் ஆளும் கட்சியாக இருக்கும் பி.ஜே.பி., தி.மு.க.வில் இருந்து ஒரு ஏக்நாத் ஷிண்டேவை உருவாக்க முயற்சிக்கிறது.
இந்த நிலையில்தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்றிருக்கிறார் சபரீசன்! அங்கு அரசியல் வியூக வகுப்பாளர்கள், அரசியல் பிரமுகர்கள் என முக்கியப்புள்ளிகளை சந்தித்து 2026 சட்டமன்றத் தேர்தல், கூட்டணிகள் குறித்து சபரீசன் ஆலோசனை நடத்தியிருக்கிறார். அதன் பிறகு நாடாளுமன்றத்திற்குள் என்ட்ரி கொடுத்திருக்கிறார். விரைவில் டெல்லியின் முகமாகவும், உதயநிதியின் மனசாட்சியாகவும் உருவெடுப்பார் சபரீசன்’’ என்றனர்.
சபரீசன் நாடாளுமன்றத்திற்குள் சென்றதுதான் இன்னொரு தரப்பை எரிச்சல் அடைய வைத்திருக்கிறதாம். அதவாது, டி.ஆர்.பாலுக்குப் பிறகு டெல்லியின் முகமாக கனிமொழி இருக்கிறார். அப்படியிருக்கும் போது, நாடாளுமன்றத்திற்கு சென்றதை கனிமொழி ஆதரவாளர்கள் விரும்பவில்லையாம்!