‘‘எடப்பாடி பழனிசாமியின் தலைமையை சசிகலா ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறார்’’ என வைகைச் செல்வன் பேசியிருப்பதுதான் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது.
அதிமுகவில் உட்கட்சி பூசல் தலைதூக்கி நிற்கும் நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராவதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன. ஒற்றை அதிகாரம் கொண்ட நபராக எடப்பாடி பழனிசாமி செயல்படுவதற்கு ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சசிகலா கொடுத்த பதவியை மறந்துவிட்டு சர்வாதிகார போக்கில் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டுகின்றனர்.
இதற்கிடையில் வழக்குகளால் இரட்டை இலை சின்னத்திற்கு சிக்கல் வந்துவிடுமோ? என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது. இந்த சூழலில் தான் தஞ்சாவூர் மாவட்டம் தெலுங்கன்குடிகாடு பகுதியில் உள்ள ஒரத்தநாடு எம்.எல்.ஏ ஆர்.வைத்திலிங்கம் வீட்டிற்கு டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் அடுத்தடுத்து சென்றுள்ளனர். முதலில் சுமார் 30 நிமிடங்கள் வைத்திலிங்கம் – டிடிவி தினகரன் சந்திப்பு நடைபெற்றது.
இதையடுத்து செய்தியாளர்களிடம் சசிகலா பேசுகையில், ‘‘வைத்திலிங்கத்துடன் அரசியல் குறித்தும் பேசினோம். வரும் 2026ல் நல்லாட்சி வழங்க அதிமுக அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். எங்கள் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆர் மக்களின் ஆட்சி என்று எப்போதும் கூறுவார். அந்த வகையில் தான் அதிமுகவும் தொடங்கப்பட்டது. இவரது வழியில் தான் ஜெயலலிதாவும் செயல்பட்டார். இதனை நாங்களும் பின்பற்றி வருகிறோம்’’ என்று தெரிவித்தார்.
இந்த நிலையில்தான், உத்திரமேரூரில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய வைகைச் செல்வன், ‘‘ எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவை ஏற்றுக்கொள்ள சசிகலா தயாராக இருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அடுத்த ஆட்சி அமைய வேண்டும் என்பதையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார் சசிகலா. திமுகவை வீழ்த்த அதிமுக ஒன்றிணைய வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து பேசி வருகிறார். இது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்’’ என பேசி இருக்கிறார்.
இதனால் அதிமுக மீண்டும் ஒன்றிணைய போகிறது என்கின்றனர் அதிமுகவினர். ஆனால் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா தான் அவர் எப்படி சசிகலாவின் தலைமையை எப்படி ஏற்றுக் கொள்வார் என கேள்வி எழுப்புகின்றனர் அரசியல் பார்வையாளர்கள்!