டாஸ்மாக் தலைமையகத்தை இன்று (மார்ச் 17) முற்றுகையிடும் போராட்டத்தை தமிழக பாஜக அறிவித்திருந்த நிலையில், சென்னையில் உள்ள அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் வீடுகளில் காவல் துறையினர் அதிக எண்ணிக்கையில் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை வீட்டின் முன்பு காவலர்கள் முகாமிட்டுள்ளனர். அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் பி.செல்வம் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தப் போராட்டத்துக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாஜக உறுப்பினர்கள் சென்னை நோக்கி வந்த நிலையில், அவர்களை காவலர்கள் தடுத்து வைத்ததாக எக்ஸ் தளத்தில் வினோஜ் பி.செல்வம் பதிவு வெளியிட்டிருந்தார். ‘இது ஜனநாயகமா?’ என்றும் அவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

மேலும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மூத்த தலைவர்கள் வீடுகளின் முன்பும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்தப் போராட்டத்துக்கு போலீஸ் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ள காரணத்தால் முன்னெச்சரிக்கையாக போலீஸார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

முன்னதாக, டாஸ்​மாக் மூலம் ரூ.1000 கோடி முறை​கேடு நடந்துள்ளதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்திருந்தது. இந்த முறைகேட்டை கண்​டித்து இன்று ஆர்ப்​பாட்​டம் நடத்தப்படும் என தமிழக பாஜக அறிவித்திருந்தது.

இது குறித்து தமிழக பாஜக தலை​வர் அண்​ணா​மலை தனது எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “தமிழகத்​தில் மது​பான விநி​யோக நிறு​வனங்களில் நடை​பெறும் அமலாக்​கத் துறை சோதனை​யில் இருந்து மக்​களின் கவனத்​தை திசை​திருப்ப முதல்​வர் ஸ்டா​லின் முயற்​சித்து வருகிறார். தற்​போது கணக்​கில் வராத ரூ.1000 கோடி பணம் லஞ்​ச​மாகப் பெறப்​பட்​ட​தாக, மது​பான ஆலைகளில் இருந்து தொடர்​புடைய ஆவணங்களை அமலாக்​கத் துறை கண்​டறிந்​துள்​ளது. இந்த விவ​காரத்​தில் தமிழக மக்​களுக்கு பதிலளிக்க வேண்​டிய கடமை முதல்​வருக்கு உள்ளது.

மேலும், முதல்​வர் பதவி​யில் தொடர தனக்கு தார்​மிக உரிமை இருக்​கிறதா என்​றும் அவர் தன்னைத் தானே கேட்​டுக்​கொள்ள வேண்​டும். திமுக​வினர் நடத்​தும் சாராய ஆலைகள் பணம் சம்​பா​திப்​ப​தற்​காக நடத்​தப்​படும் டாஸ்​மாக் நிறு​வனத்​தில் நடை​பெற்​றுள்ள ரூ.1000 கோடி ஊழல், தமிழகத்தையே உலுக்​கி​யுள்​ளது.

திமுக​வின் இந்த மெகா ஊழலை கண்​டித்து மார்ச் 17-ம் தேதி டாஸ்​மாக் தலைமை அலு​வல​கம் அமைந்​துள்ள சென்னை தாள​முத்து நடராசன் மாளிகையை முற்​றுகை​யிடும் போ​ராட்​டம் நடை​பெறும்” என்று குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் பாஜக தமிழக நிர்வாகிகளின் வீட்டின் முன்பு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal