தமிழக அரசியல் களத்தில் ராஜ்யசபா சீட் (மாநிலங்களவை தேர்தல்) யாருக்கு என்பதில்தான் போட்டா போட்டி நிலவுகிறது. இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர் பாணியை கையில் எடுத்திருப்பதாக மூத்த ரத்தத்தின் ரத்தங்கள் கூறுகின்றனர்.

இது பற்றி எம்.ஜி.ஆர். காலத்து எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமாக இருக்கும் மூத்த ரத்தத்தின் ரத்தங்களிடம் பேசினோம். ‘‘சார், தே.மு.தி.க.விற்கு ராஜ்யசபா சீட் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறிவிட்டார். காரணம். 2021 சட்டமன்றத் தேர்தலின்போது அ.தி.மு.க.வுடன் கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடத்திய தே.மு.தி.க., தி.மு.க.வுடனும் ஒரே சமயத்தில் பேச்சுவார்த்தை நடத்தியது. பின்னர் ‘என்ன நடந்ததோ?’ அ.ம.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி வைத்தது. இதனால் 3 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் 3வது முறையாக அ.தி.மு.க.வால் ஆட்சியமைக்க முடியாமல் போனது. இதன் பின்னணியில் தி.மு.க. இருந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில்தான் இரண்டு ராஜ்ய சபா சீட்டுகளும் அ.தி.மு.க.வினருக்கே கொடுக்க எடப்பாடி பழனிசாமி முடிவு செய்திருக்கிறாராம்.

தென்மாவட்டத்தில் முக்குலத்தோரின் உள் அமைப்பான அகமுடையார் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ராஜ்யசபா சீட் கொடுக்க எடப்பாடி பழனிசாமி முடிவு செய்திருக்கிறாராம். காரணம், எம்.ஜி.ஆர். காலத்தில் அ.தி.மு.க. ஃபைலாவை உருவாக்கியது அகமுடையார் சமுதாயத்தைச் சேர்ந்த சங்கரபாண்டி. அதன்பிறகு அதே சமுதாயத்தைச் சேர்ந்த பழக்கடை பாண்டிக்கும் முக்கியத்துவம் கொடுத்தார் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர். மறைவிற்குப் பிறகு ஜெயலலிதா வந்தபோது சசிகலாவின் ஆதிக்கம் அதிகமானபோது முக்குலத்தோரில் கள்ளர் மற்றும் மறவர்க-ளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, அகமுடையார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டனர். தமிழகத்தில் அகமுடையார் சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் 70 லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்கள் உள்ளன. அ.தி.மு.க.வில் கள்ளர் மற்றும் மறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அதிகப் பொறுப்பில் இருக்கிறார்கள். ஆனால், அகமுடையார் சமுதாயத்தைச் சேர்ந்த ஓ.எஸ்.மணியன் மட்டும்தான் முன்னாள் அமைச்சராக இருந்தார்.
அதே சமயம், தி.மு.க.வில் அகமுடையார் சமுதாயத்தைச் சேர்ந்த டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக இருக்கிறார். அவரது தந்தை டி.ஆர்.பாலு எம்.பி.யாக டெல்லியில் தி.மு.க.வின் முகமாக இருக்கிறார். இந்த நிலையில்தான் தென்மாவட்ட மக்களின் பிரதிநிதியாக டெல்லியில் அ.தி.மு.க.வின் முகமாக இருக்க, அ.தி.மு.க. மருத்துவரணி மாநிலச் செயலாளர் டாக்டர் சரவணனுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்க எடப்பாடி பழனிசாமி முடிவு செய்திருக்கிறாராம்.
காரணம், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மதுரை தொகுதியில் போட்டியிட யாரும் முன்வராத நேரத்தில், எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்று துணிச்சலுடன் போட்டி போட்டார் டாக்டர் சரவணன். ஆனால், உள்குத்து அரசியலின் காரணமாக தோற்கடிக்கப்பட்டார். தவிர, ஜெயலலிதா பிறந்தநாளில் சேலத்திற்கே சென்று மருத்துவ முகாம்களை நடத்தினார் டாக்டர் சரவணன். ஓ.பி.எஸ். கோட்டை என்று சொல்லப்படும் தேனியில் எடப்பாடி பழனிசாமி மாநாடுபோல் கூட்டம் நடத்தியதில் டாக்டர் சரவணனுக்கும் பங்கு உண்டு. மேடையிலேயே சரவணனின் பெயரையும் உச்சரித்தார் எடப்பாடி பழனிசாமி!
தென்மாவட்ட மக்களுக்கு மருத்துவ உதவி, பொருளாதார உதவி என அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்து வருகிறார் டாக்டர் சரவணன். எனவே, அவருக்கு ராஜ்யசபா சீட் கொடுப்பதன் மூலம் அகமுடையார் வாக்குகள் எப்படி எம்.ஜி.ஆர்.காலத்தில் வந்ததோ, அது போல் மீண்டும் வருவதற்கு எடப்பாடி பழனிசாமி முயற்சித்து வருகிறார்’’ என்றனர்.
ராஜ்யசபா சீட் விவகாரத்தில் எம்.ஜி.ஆர். பாணியை எடப்பாடி பழனிசாமி கையில் எடுக்க வேண்டும் என்பதுதான் அகமுடையார் சமுதாய மக்களின் எண்ணவோட்மாக இருக்கிறது.