‘மதுரையில் பத்து தொகுதிகளிலும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்று சொல்லுகின்ற அமைச்சர் மூர்த்தி, கடந்த மூன்று முறை வெற்றி பெற்ற மதுரை மேற்குத் தொகுதியில் எங்களது மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவை எதிர்த்து போட்டியிட தயாரா?’’ என அ.தி.மு.க. மருத்துவரணி இணைச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மதுரை டாக்டர் சரவணன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

ஜெயலலிதா 77வது பிறந்த நாள் கொண்டாட்டமாக அதிமுக மருத்துவ அணி சார்பில், அதன் இணைச் செயலாளர் முன்னாள் எம்எல்ஏ டாக்டர் சரவணன் மதுரை மாநகர் 26வது வார்டு, நரிமேடு பகுதியில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கி, ஆயிரம் பேர்க்கு அன்னதானம் வழங்கினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த, முன்னாள் எம்.எல்.ஏ., டாக்டர் சரவணன் கூறும்போது,

‘‘அம்மா ஜெயலலிதா அவர்களின் 77வது ஆண்டு பிறந்தநாள் விழாவை உலகம் முழுவதும் தமிழர்கள் பல்வேறு வடிவங்களில் கொண்டாடி கொண்டு இருக்கிறார்கள்.அம்மாவின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாநகரில் 26 வது வார்டில் கழக மருத்துவ அணி சார்பாக, பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு இருக்கிறோம்.

10 லட்சம் இளைஞர்களுக்கு வருடந் தோறும் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவோம் என்று பொய் வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த விடியா திமுக அரசை வருகின்ற 2026 ஆம் தேர்தலில் வீட்டுக்கு அனுப்புவதற்காகவும், எடப்பாடியார் அவர்களுடைய தலைமையில் அமையும் அண்ணா திமுக கூட்டணி வெற்றி பெற்று, இளைஞர்களின் நலனைப் பாதுகாக்கும் அரசு அமையும் என்பதனை விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, இன்று அம்மா பிறந்த நாளில், 77 இளைஞர்கள் தொடர் ஜோதி ஓட்டம் ஓடி, தங்களது வணக்கங்களை செலுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

அம்மாவின் அரசில் பெண்களுக்கு, – பெண் குழந்தைகளுக்கு, – தாய்மார்களுக்கு, – முதியவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அம்மா அவர்கள் கொண்டு வந்து செயல்படுத்தினார்கள் என்பதனை நினைவு கூறும் நலமாக 77 தாய்மார்கள் பால் குடம் ஊர்வலமாக வந்து தற்போது அம்மாவின் கட் அவுட்டிற்கு அபிஷேகம் செய்து தங்களது வணக்கங்களை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.ஆயிரம் பேருக்கு இன்று அன்னதான நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அம்மாவை இன்று நாங்கள் அனைவரும் தெய்வமாக வணங்கிக் கொண்டிருக்கிறோம் இளைஞர்களும் தாய்மார்களும் மிகவும் ஆர்வமாக வந்து அம்மாவின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி வணங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

வருகின்ற 2026 ஆம் தேர்தலில் எடப்பாடியார் முதலமைச்சராக அதிமுக ஆட்சி அமைய நாங்கள் சூளுரை மேற்கொள்கிறோம். நான்கரை வருட கால நல்லாட்சியை தந்தவர் எடப்பாடியார். கொரோனா காலத்தில் மிகப்பெரிய அளவிலே பாதுகாப்பை ஏற்படுத்தி தந்தது எடப்பாடியார் ஆட்சி. அவரது ஆட்சியில் பதினோரு மருத்துவக் கல்லூரிகள் புதிதாக திறக்கப்பட்டன. ஆனால் இந்த திமுக ஆட்சியில் ஒரு மருத்துவ கல்லூரி கூட புதிதாக திறக்கப்படவில்லை. மத்திய அரசு கட்டாயமாக நீட் தேர்வை கொண்டு வந்த பொழுது, ராஜதந்திரத்தோடு அரசு பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் 7.5% இட ஒதுக்கீடு கொண்டு வந்தவர் எடப்பாடியார்.

வாக்கு வங்கி அரசியலுக்காக மும்மொழிக் கொள்கையிலே திமுக அரசு நாடகம் ஆடுகிறது. நாடாளுமன்றத்திலும் மத்திய அரசு அலுவலகங்களில் முன்பும் தங்களது எதிர்ப்பை தெரிவிக்காமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் எதிர்ப்பை தெரிவித்து மக்களை ஏமாற்ற நாடகம் ஆடிக் கொண்டிருக்கின்றார்கள் திமுகவினர்.

சிறுபான்மை மக்களின் வாக்கு வங்கியை குறிவைத்து அவர்களது மத உணர்வை தூண்டும் விதமாக ஜாதி மத அரசியலை மறைமுகமாக வளர்த்துக் கொண்டிருக்கிறது திமுக அரசு. 2026 இல் அண்ணா திமுக ஆட்சி அமைய நாங்கள் இரவு பகல் பாராமல் சுழன்று வேலை செய்வோம் என்று, இன்று அம்மாவின் படத்திற்கும், எம்ஜிஆர் படத்திற்கும் பாலாபிஷேகம் செய்து சூளுரை மேற்கொண்டு இருக்கிறோம்

சிங்க பெண்ணாக தனது ஆட்சி காலத்தில் பெண்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்தவர் ஜெயலலிதா. உலகிலேயே ஏழாவது பெரிய இயக்கம் – இந்தியாவிலே மூன்றாவது பெரிய இயக்கம் – தமிழகத்திலே தனிப்பெரும் இயக்கம் – கடைவாரி கிராமங்கள் வரை நல்ல கட்டமைப்பை கொண்டு இருக்கின்ற இயக்கம் அண்ணா திமுக வருகின்ற 2026 ஆம் தேர்தலில் கண்டிப்பாக 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

மதுரையில் பத்து தொகுதிகளிலும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்று சொல்லுகின்ற அமைச்சர் மூர்த்தி, கடந்த மூன்று முறை வெற்றி பெற்ற மதுரை மேற்குத் தொகுதியில் எங்களது மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜை எதிர்த்து போட்டியிட தயாரா?’’ என டாக்டர் சரவணன் கேள்வி எழுப்பினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal