தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மூன்றாவது மொழியாக இந்தியை கற்பிக்க தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ‘‘அரசு பள்ளி மாணவிகளாகிய எங்களுக்கு மும்மொழி கற்க உரிமையில்லையா’’ என அரசுப் பள்ளி மாணவிகள் மூன்று பேர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு புதிய தேசிய கல்வி கொள்கை மத்திய அரசு அறிமுகம் செய்தது. மத்திய அரசின் சிக்ஷா அபியான் எனப்படும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு தர வேண்டிய ரூ2,152 நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை. ‘மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ பள்ளித் திட்டத்தில் இணைவதற்கு சம்மதம் தெரிவித்து, தமிழக அரசு கையெழுத்திட்டால் மட்டுமே, நிதி ஒதுக்க முடியும்’ என, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பி.எம்.ஸ்ரீ பள்ளி திட்டத்தில் இணைந்தால், அது தேசிய கல்வி கொள்கையையும், மும்மொழி கொள்கையையும் ஏற்றுக் கொண்டதாகிவிடும் என்று கூறி அதில் இணைவதற்கு தமிழக அரசு மறுத்து வருகிறது.
இன்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், ‘‘இரு மொழிக் கொள்கையை பின்பற்றுவதில் உறுதியாக உள்ளோம்’’ எனக்கூறியுள்ளார். தி.மு.க.,வின் இந்த முடிவுக்கு அதன் கூட்டணி கட்சிகள் ஆதரவு அளித்து வந்தாலும், ஏராளமானோர், அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மூன்றாவதாக ஒரு மொழியை கற்க வாய்ப்பு வழங்கலாம் என தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஒன்றியத்தைச் சேர்ந்த தெளிச்சாத்தநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவிகள் 3 பேர் பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.
அதில் அந்த மாணவிகள் கூறியுள்ளதாவது: ‘‘தமிழக முதல்வருக்கு வணக்கம். அரசு பள்ளி மாணவிகளாகிய எங்களுக்கு மும்மொழி கற்க உரிமையில்லையா? ஏழை மாணவர்களாகிய எங்களுக்கு இந்த வாய்ப்பை வழங்க அனுமதி கொடுங்கள்’’எனக்கூறியுள்ளனர்.
தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இதுதான் தமிழை வைத்து தமிழகத்தில் ‘அரசியல்’ செய்யும் அரசியல் கட்சியினரை அதிரவைத்திருக்கிறது.